நத்தம் பகுதியில் தொடர்கதையாகும் காவிரி குடிநீர் விரயம்: பொதுமக்கள் வேதனை

நத்தம்: நத்தம் பகுதியில் குழாய்கள் உடைப்பால் காவிரி குடிநீர் விரயமாவது தொடர்கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். நத்தம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திண்டுக்கல்லில் இருந்து வந்தடைகிறது. கணவாய்பட்டி, பங்களா, எருமைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு மின்விசை பம்புகள் மூலம் அவை நிரப்பப்பட்டு, அங்கிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக காற்று வெளியேறுவதற்கு ஆங்காங்கே யு வடிவ குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நிலத்தில் தொட்டிகள் அமைத்து இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திண்டுக்கல்- நத்தம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Advertising
Advertising

இதற்காக இப்பணி ஆரம்பத்தின்போதே சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது நிலத்தடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்து போனது. இதனால் பல குழாய்களில் குடிநீர் வெளியேறி தொடர்ந்து விரயமாகி வருகிறது. இதை கண்டு பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கோடை காலம் என்பதால் நத்தம் பகுதியில் பல கிராமங்கள் குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால் காவிரி குடிநீர் விரயமாவது தொடர்கதையாக உள்ளது. எனவே சாலை பணிகளை குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். அப்போதுதான் குழாய் சேதம் அடையும்பட்சத்தில் அதை ஊழியர்களை கொண்டு உடனே பராமரிப்பு செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: