திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் நின்று செல்லுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

கோவில்பட்டி: திருச்சியில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் ரயில் போக்குவரத்து மார்ச் 24ம் ேததி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு வழிகாட்டுதலுடன் ஒவ்வொரு மாநிலங்களிலும் பெரும்பாலான ரயில்கள் 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் ஒரு சில மார்க்கங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் திருச்சியில் இருந்து நாகர்கோவில் வரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.திருச்சியில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரை, விருதுநகர், நெல்லை, வள்ளியூர், நாங்குநேரி வழியாக மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. இதேபோல் நாகர்கோவிலில் இருந்து தினமும் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இதே மார்க்கத்தில் திருச்சிக்கு சென்றடைகிறது.

இந்த எக்ஸ்பிரஸ் மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வர்த்தக நகரமான கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டிக்கு நிறுத்தம் இல்லை.

இதையடுத்து கோவில்பட்டி பகுதி பயணிகள், இன்டர்சிட்டி எக்ஸ்பிரசை கோவில்பட்டி ரயில் நிலையத்திலும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சேதுரத்தினம் கூறுகையில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோவில்பட்டியில் நிற்பதில்லை. கோவில்பட்டி ரயில் நிலையமானது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்க கூடிய பகுதி. எனவே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் நின்று சென்றால் பெரும்பாலானவர்கள் பயன்பெறுவதோடு, ரயில்வேக்கும் அதிக வருவாய் கிடைக்கும், என்றார்.

Related Stories: