புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..: பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 158 ஆக உள்ளது. இதற்கிடையில், புழல் மத்திய சிறையிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே 30 தண்டனை கைதிகள் மற்றும் ஒரு தூய்மை பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புழல் சிறை வளாகத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டது. இதில், கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்நிலையில் இன்று புழல் மத்திய சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிறைக்காவலர் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 31ல் இருந்து 33 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சிறை கைதிகளிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. முன்னதாக, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கைவினைப்பொருட்கள் தயாரிப்புப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. பயிற்சிக்கு வந்த வெளிமாவட்ட கைதிகளால் கொரோனா பரவியது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: