கர்ப்பிணி யானை பலி எதிரொலி; நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள்...இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி டுவிட்

மும்பை: நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி தெரிவித்தார். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளது. இப்பகுதியில் தேசிய பூங்காவும் உள்ளது. இங்கு ஏராளமான அரிய வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி மலப்புரம் நிலம்பூர் வன அதிகாரியான மோகன கிருஷ்ணன் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காட்டு யானை ஆற்றிற்குள் நின்றுக்கொண்டிருந்தது. அந்த யானையின் நடவடிக்கையை பார்த்தபோது அதன் உடலில் காயம் இருப்பதை மோகன கிருஷ்ணன் உணர்ந்தார்.

அருகில் சென்று பார்த்தபோது யானை அடிக்கடி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி உயர்த்துவதை பார்த்தார். அப்போதுதான் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்தார். அந்த பெண் யானைக்கு 15 வயது இருக்கும். இது குறித்து விசாரித்தபோது, இந்த யானை அடிக்கடி ஊருக்குள் வந்து வாழை, கரும்பு உட்பட விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்லுமாம்.இதனால் கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடியை மறைத்து வைத்து கெடுத்துள்ளனர். இதை யானை சாப்பிட்டபோது வெடி வெடித்துள்ளது. இதல் வாய் சிதறி பலத்த காயம் அடைந்தது. இதனால் அந்த யானைக்கு பல நாட்களாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யானை நாளுக்கு நாள் மெலிந்தது. வாயில் ஏற்பட்ட காயத்தில் ஈக்கள் மொய்ப்பதில் இருந்து தப்பிக்க யானை தண்ணீருக்குள் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தி நின்றுள்ளது. இதையடுத்து யானையை காப்பாற்ற முடிவு செய்த மோகன கிருஷ்ணன் இது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு யானையை தண்ணீரில் இருந்து கரையேற்ற முயன்றனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. தண்ணீரை விட்டு வெளியே வரமறுத்து நின்ற யானை சிறிது நேரத்தில் இறந்தது.

தொடர்ந்து  கும்கிகள் உதவியுடன் யானை உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யானை உடல் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் அது கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது வன அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் யானை எரிக்கப்பட்டது. அன்னாசி பழத்தில் வெடியை வைத்து இரக்கமின்றி யானை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதுமிருந்து விலங்குகள் நல ஆர்வலர் களால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: