10 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் வசதிக்காக ஆவின் பால் நிறுவனம் தொடர்ந்து அதிகாலையில் பால் வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவியது.   இதனால் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆவின் நிறுவனத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நெருக்கடி காலத்தில் பெரும்பாலான தனியார் பால் பண்ணைகள் தங்கள் செயல்பாடுகளை முடக்கிவிட்டன.

இருப்பினும் ஆவின் நிறுவனம் தனது பணியை முழுமையாக செய்து வருகிறது. கடந்த 31ம் தேதியில் அதிகபட்சமாக 37 லட்சத்து 24 ஆயிரம் லிட்டர் பால் விவசாயிகளிடம் இருந்து ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 24 லட்சத்து 78 ஆயிரம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், மாதவரத்தில் 250 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று வந்துவிட்டது என்ற செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை தொழில் போட்டியாளர்கள் மற்றும் குழப்பத்தை விளைவிப்பவர்கள்  பரப்பி  வருகின்றனர். இது போன்ற செய்திகள் தவறானவை.

மாதவரம் பண்ணையில் பணியாற்றும் 300 பணியாளர்களில் 10 பேருக்கு மட்டுமே கொரேனா தொ்ற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன்னர் ஆப்ரேட்டர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு மாதத்துக்கு முன்பாகவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்து போனார். ஆவின் நிறுவனத்தில் அரசு வழிகாட்டுதலின் பேரில் முழுமையான சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. தரமான பாலை குறிப்பிட்ட நேரத்தில் சப்ளை செய்ய முழு மூச்சாக வேலை செய்து கொண்டு இருக்கிறோம். எனவே தொழில் போட்டியாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் பரப்பும் செய்தியை நம்ப வேண்டாம்.

Related Stories: