கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் மரணம் அடைந்தவர்கள் எத்தனை பேர்?

* மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை முரண்பட்ட தகவல்

* விளக்கம் அளிக்க மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் மரணம் அடைந்தவர்கள் விவரம் தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி வெளியிடும் தகவல்களுக்கு இடையில் முரண்பாடு இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது வரை (ஜூன் 2) 16,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 8506 பேர் குணமடைந்துள்ளனர். 7805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி சென்னையில் 51.7 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 47.5 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 0.8 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதைப்போன்று சென்னையில் கொரோனா பாதிக்கப்aபட்டு மரணம் அடைந்தவர்களின் தகவல்கள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து மறுநாள் மாநகராட்சி சார்பில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியிடப்படும். இந்நிலையில் இந்த தகவல்களுக்கு இடையில் முரண்பாடு இருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மே 31ம் தேதி மாலை சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் 129 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று  கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 1ம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் 122  பேர் மட்டும் மரணம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதைப்போன்று ஜூன் 1ம் தேதி  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை சென்னையில் மொத்தம் மரணம்  அடைந்தவர்களின் எண்ணிக்கை 138 என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஜூன் 2ம் தேதி  காலை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் 128 பேர் மட்டும் மரணம்  அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைப்போன்று ஜூன் 2ம் தேதி மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி சென்னையில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 150 என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 3ம் தேதி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 135 பேர் மட்டும் மரணம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் மரணம் அடைந்தவர்கள் தொடர்பாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை வெளியிடும் தகவல்களுக்கு இடையில் முரண்பாடு உள்ளது. எனவே இது தொடர்பாக இரண்டு துறையினரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று  மருத்துவ நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுகாதாரத்துறை துறை மொத்த இறப்பு எண்ணிக்கை

மே 28    106

மே 29    113

மே 30    119

மே 31    129

ஜூன் 1    138        

ஜூன் 2    150

மாநகராட்சி மொத்தம் இறப்பு எண்ணிக்கை

மே 29    102

மே 30    109

மே 31    113

ஜூன் 1    122

ஜூன் 2    128

ஜூன் 3    135

Related Stories: