கொரோனாவில் இருந்து தப்புவதற்குள், படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் ரெண்டே ரெண்டு கிராம்தான்… ஆனா, ரவுண்டு கட்டி அடிக்குது

* இயற்கை கற்றுத்தரும் வரலாற்று பாடம்   

* பறவைகளைப் பாதுகாத்தால் தப்பலாம்

சென்னை: கொரோனா இந்தியாவில் குடியேறி இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. இந்த வைரஸின் ஒட்டுமொத்த எடையே ஐந்தரை கிராம்தான். ஏற்படுத்திய அழிவு நிறைய. சீனாவில் கொரோனா பரவத் துவங்கியபோது பார்வையாளராக இருந்த நாம், இன்று, அதன் வலியை உணர்ந்து கொண்டிருக்கிறோம்.இதிலிருந்து மீள்வதற்குள்,வெட்டுக்கிளி வடிவில் மற்றொரு ஆபத்து கிளம்பி விட்டது. இதன் சராசரி எடை 2 கிராம்தான். ஆனால், பெரும் படையுடன் திரண்டு வரும் இவை ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். இன்று நேற்றல்ல... 2 நூற்றாண்டுகளாக இந்த பிரச்னையை இந்தியா சந்தித்துள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போதும் வெட்டுக்கிளிகளை அழிக்க பல்வேறு உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன. 19ம் நூற்றாண்டில் 1812, 1821, 1843-1844, 1863, 1869-73, 1878, 1889-1892, மற்றும் 1896-97 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் பல மாநிலங்கள் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

1927 முதல் 1929ம் ஆண்டு வரை, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்தது. பின்னர், 1929ல் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்தும் நிலைக்குழுவும், 1930ல் மத்திய வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு அமைப்பு. பின்னர், வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம், நிரந்தர அமைப்பாக 1939ல் கராச்சியில் (பிரிக்கப்படாத இந்தியா) ஏற்படுத்தப்பட்டது. வெட்டுக்கிளி தாக்குதலை முன்கூட்டியே கணித்து எச்சரிப்பதுதான் இதன் பிரதான பணி. காலனி ஆதிக்கத்தின்போது, வெட்டுக்கிளியை அழிக்க சில உத்திகள் கையாளப்பட்டன. முட்டை, லார்வா பருவத்திலேயே அழிப்பது. வயல் வெளி, தோட்டங்களில் பைகளை தொங்க விடுவது. வேட்டி, ஜமக்காளம் போன்ற விரிப்புகளை வயல் வெளியில் விரித்து வைத்து பிடிப்பது.

இந்த வேலைக்கு, பிரிட்டிஷார் இந்தியர்களை பணியமர்த்தினர். ஆனாலும், கிராமங்களில் விவசாயம் பார்த்த பலர் ‘வெட்டுக்கிளியை ஒழிக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கத்தோட கடமைதானே. நாம ஏன் தலைய கொடுக்கணும்’ என ஒதுங்கி விட்டார்கள். இதனால் கோபமான பிரிட்டிஷ் அரசாங்கம். ‘நீங்க அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு தரலேன்னா, வெட்டுக்கிளியால் பயிர் அழிஞ்சு போச்சுன்னு வரி தள்ளுபடி கேட்கக்கூடாது’  என மிரட்டியது. தவிர, வெட்டுக்கிளியை ஒழிக்க ஆட்களை நியமித்து, அழித்ததற்கு ஏற்ப சன்மானம் வழங்கியது.  ஆனால், எந்த முயற்சியிலும் எதிர்பார்த்த பலனில்லை. தொடர் கண்காணிப்புக்கு பிறகு, ஒரு உண்மை புலப்பட்டது. பருந்து வகைகள், காகம், சோளக்குருவி, மயில், வெட்டுக்கிளிகளை உணவாக உட்கொண்டன என்பதுதான் அது.  

மனித முயற்சியை விட இதன்மூலம் அதிக வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டதை அப்போதுதான் உணர்ந்துள்ளனர்.மேலும், தவளை, பாம்பு, தரை வண்டுகள் ஆகியவையும் வெட்டுக்கிளிகளை உட்கொள்பவை. ஆனால் இவற்றின் வாழ்விடங்களை, நகர மயம் என்ற பெயரில் மனிதர்கள் அழித்து விட்டனர். எனவே, இயற்கையை பாதுகாத்து, அதனுடன் இணைந்து வாழும் பறவையினங்கள், காட்டுயிர்களையும் காப்பாற்றினால் உணவுச் சுழற்சி விடுபடாது.  பின்னர், இது போன்ற பேரழிவுகளை எதிர்கொண்டு போராட வேண்டிய அவசியம் ஏற்படாது. என இயற்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.வெளியில் சென்று வந்த பிறகு கை, கால் கழுவுவது உட்பட, நாம் பாரம்பரிய பழக்கங்களை விட்டு விடக்கூடாது என்பதை கொரோனா உணர்த்தி விட்டது.

இதுபோல், இயற்கையையும், காட்டுயிர்களையும் காக்க வேண்டிய அவசியத்தை கடந்த கால வரலாறுகள் மூலம் வெட்டுக்கிளிகள் உணர்த்தியிருக்கின்றன. நம் மாநிலத்தை தாக்குமா தாக்காதா என்றெல்லாம் ஆராய இது நேரமல்ல. வெட்டுக்கிளியின் முழு கூட்டமும் இன்னும் வரவில்லை. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஊட்டி உள்ளிட்ட பகுதியில் வெட்டுக்கிளிகள் வந்தது பதிவாகியுள்ளது. எனவே அலட்சியம் கூடாது. மழைக்காலத்துக்கு முன் உடனடி தடுப்பு நடவடிக்கை தேவை. இதை அரசும் உணர வேண்டும். இல்லையென்றால், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் அழிக்கப்பட்டு பட்டினிச்சாவை எதிர்கொள்ள வேண்டிய அவலம் நேரும் என்று எச்சரிக்கின்றனர் இயற்கையாளர்கள்.

இந்தியாவில் எச்சரிக்கை மையம்

வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம், கராச்சியில் 1939 ஏற்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு, சுதந்திர இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், இந்த எச்சரிக்கை மையம் நிறுவப்பட்டது. இதன் பிரதான பணி, வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம் இருந்தால் எச்சரிக்கை விடுப்பதுதான்.

13 நாடுகள் கடந்து வரும் வெட்டுக்கிளிகள், இந்தியாவுக்குள் ராஜஸ்தான் வழியாக நுழைகின்றன. ஒரு வெட்டுக்கிளியின் சராசரி எடை 2 கிராம்.

தொடர்ந்து 150 கி.மீக்கு பெருங் கூட்டமாக பறக்கும். சராசரியாக ஒரு சிறிய கூட்டத்தில் சுமார் 2 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். அவை ஒரு நாளில் தனது

எடையளவு உணவை உட்கொள்ளும். இந்த உணவு 10 யானை, 25 ஒட்டகம், 2,500 மக்கள் உண்ணும் உணவுக்கு சமமானது.

பாலைவன வெட்டுக்கிளிகள்பாலைவன வெட்டுக்கிளிகள்

எத்தியோபியா, சோமாலியா, எரித்ரியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதுதவிர, ஏமன், ஓமன், தெற்கு ஈரான், பாகிஸ்தானில் உள்ள பலுஜிஸ்தான், கைபர் பக்துன்வா மாகாணம் ஆகியவையும் இவற்றின் இனப்பெருக்க பகுதிகள். இவற்றின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமாக மார்ச்- ஏப்ரலில் நல்ல மழை இருக்கும். அப்போது இனப்பெருக்கமும் அதிகமாகும்.

19ம் நூற்றாண்டில், 1812, 1821, 1843-1844, 1863, 1869-73, 1878, 1889-1892, 1896-97 ஆண்டுகளில் இந்தியாவின் பல மாநிலங்கள் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. 1964 - 1997 இடையே இந்தியாவில் 13 முறை வெட்டுக்கிளி தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 1997 - 2010 வரை 5 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 2010 - 2018 வரை பெரிய அளவில் தாக்குதல் பதிவாகவில்லை என்கிறது ஜெய்ப்பூரில் உள்ள வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம்.

ராஜஸ்தானில், சுமார் 3.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான கடுகு, சீரக பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளன.

உலகப்போர் அளவுக்கு  பட்டினிச்சாவால் பேரழிவு

ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட அழிவுகள் நிறைய. பயிர்களை அழித்து, மனித இனத்தின் பட்டினிச்சாவுக்கு இவை காரணமாகியுள்ளன. 2ம் உலகப்போரில் ஏற்பட்ட பேரழிவுக்கு சமமாக, பட்டினிச்சாவால் ஏற்படும் அழிவுக்கு வெட்டுக்கிளிகள் காரணமாக அமையும் என்பது  பலராலும் ஏற்கப்பட்ட உண்மை.

அமுர் பால்கன் ‘நம்பிக்கை நாயகன்’

அமுர் பால்கன்.... அதாவது, அமுர் வல்லூறு. பருந்து வகையை சேர்ந்த பறவை, இவை, கிழக்கு ஆசியாவில் இருந்து ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிகளுக்கு ஆண்டுதோறும் வலசை செல்கின்றன. இந்தியாவில் குறிப்பாக, அக்டோபரில் இருந்து நவம்பர் வரை நாகலாந்துக்கு லட்சக்கணக்கி–்ல் இவை வலசை வரும். அப்போது, உணவுக்காக மக்கள் இவற்றை அதிகம் வேட்டையாடினர். இதனால் அழிவின் விளிம்பில் உள்ளன. இதன் பிரதான உணவே ஈசல், வெட்டுக்கிளி போன்ற பூச்சியினங்கள்தான். அதிலும், வெட்டுக்கிளிகள் பறந்து வரும்போதே பிடித்து சாப்பிட்டு விடும். சுமார் 4 ஆண்டு முன்பு, கூந்தன்குளம் விஜயநாராயணம் ஏரி வறண்டு புல் முளைத்தன.

இவற்றை சாப்பிட வெட்டுக்கிளிகள் வந்தன. இதை தொடர்ந்து, அந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான அமுர் பால்கன்கள் அந்த ஏரியில் குவிந்ததை காண முடிந்தது.

பறவையினத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதை உணர்த்திய சம்பவம் இது. அமுர் பால்கன், ஹாரியர் போன்ற பூச்சிகளை பிடிக்கும் பருந்து வகைகள்,

பறவைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது என, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் பறவை ஆர்வலர் திருநாரணன் கூறினார்.

வழக்கம்போல் பாகிஸ்தான் மீது பழி

ஜெய்ப்பூரில் வெட்டுக்கிளி வருகை அதிகமானபோது, ‘பாகிஸ்தான்தான் இதற்கெல்லாம் முழு காரணம். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் வெட்டுக்கிளி இனப்பெருக்கம் அதிகம். அவற்றை பூச்சிக்கொல்லி மருந்து அடித்து பாகிஸ்தான் கட்டுப்படுத்தாததால்தான் இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு அதிகமாகி விட்டது என பழிபோட்டுள்ளது வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம். ‘‘பழிபோடுவதை விட்டு விட்டு, இரு நாடுகள் தரப்பில் நிபுணர் குழு நியமித்து ஆலோசனை நடத்தி கட்டுப்படுத்த வேண்டும்’’ என்கின்றனர் பூச்சியியலாளர்கள்.

இந்த ஆண்டு ஏன் அதிகம்?

மேற்காசிய நாடுகள், ஓமன்,ஏமன், எத்தியோபியா, சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளிலும் மழைப்பொழிவு அதிகம் இருந்ததால் வறண்ட நிலப்பரப்புகள் ஈரமாகின. இதனால் வெட்டுக்கிளிகள்பெருகின.காற்றின் திசை சாதகமானதால் இனப்பெருக்க களங்களான ஈரான்,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இந்தியாவுக்கு வந்துள்ளன. இந்தியாவில்,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவில் பெரும் நாசம் விளைவிக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிகழ்வு இது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புரோட்டீனாக மாற்றும் வெட்டுக்கிளிகள் புரோட்டீன் நிறைந்தவை. காரணம், அவை தான் உட்கொள்ளும் அனைத்தையுமே விலங்கு புரோட்டீனாக மாற்றி விடுமாம்.

Related Stories: