×

10ம் வகுப்பு மாணவி தற்கொலை எதிரொலி: அரசு லேப்டாப்பை பயன்படுத்த அனுமதி: கேரள அரசு அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: மலப்புரம்  அருகே ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் 10ம் வகுப்பு மாணவி  தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கேரள அரசு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. கேரள  மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி அருகே இரிம்பிளியம் பகுதியைச்  சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மகள் தேவிகா(15). இவர் 10ம் வகுப்பு செல்ல  இருந்தார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ேகரள பள்ளிகளில் ஆன்லைன்  வகுப்புகள் தொடங்கின. இந்த நிலையில் தேவிகாவின் வீட்டில் இருந்த  டிவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதானது. மேலும் ஸ்மார்ட் போன்,  இன்டர்நெட் வசதியும் கிடையாது. இதனால் தேவிகாவால்  ஆன்-லைன்  வகுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் கடும் மனவேதனை அடைந்த தேவிகா  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, மாணவியின்  தற்கொலைக்கு அரசுதான் காரணம் என குற்றம்சாட்டி கேரளா முழுவதும்  எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மேலும் மாணவி தேவிகாவின் தங்கை மற்றும்  தம்பியின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  இந்த  நிலையில் வீடுகளில் டிவி மற்றும் ஸ்மார்ட் போன்கள் இல்லாத ஏழை  குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் உள்ள லேப்-டாப், டிவி மற்றும்  புரொஜெக்டர்களை பயன்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. கேரள அரசு  பள்ளிகளில் 1.20 லட்சம் லேப்-டாப்கள், 70 ஆயிரம் புரொஜெக்டர்கள் மற்றும்  4,545 டிவிக்களும் உள்ளன. இவற்றை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள அரசு  அனுமதித்துள்ளது.

இதன்படி வீடுகளில் டிவி, ஸ்மார்ட் போன்கள் இல்லாத  மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கணெக்கெடுக்க வேண்டும்.  அந்த மாணவர்களை பள்ளி அல்லது ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வரவழைத்து,  அரசின் லேப்டாப்கள், டிவிக்கள் மற்றும் புரொஜெக்டர்களை பயன்படுத்தி  கொள்ள அனுமதிக்கவேண்டும். இதற்கிடையே ஆன்-லைன் வகுப்புகளுக்காக யாரும் பணம்  கொடுத்து டிவி அல்லது ஸ்மார்ட் போன்கள் வாங்க தேவையில்லை என கேரள  கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags : Kerala , 10th grade student suicide, Government laptop, Kerala Govt
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...