பேருந்துகள் சீக்கிரமே டெப்போவுக்கு திரும்புவதால் பஸ் நிலையங்களில் விடிய விடிய குழந்தைகளுடன் பரிதவிக்கும் பயணிகள்: இரவு 10 மணி வரை இயக்க வலியுறுத்தல்

விருதுநகர்: அரசு பஸ்கள் இயக்கம் தொடர்பாக தெளிவான அறிவுறுத்தல் இல்லாததாலும், போதிய அளவுக்கு பஸ்கள் இயக்கப்படாததாலும், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் இரவு வீடு திரும்ப முடியாமல் பஸ் நிலையங்களில் விடிய, விடிய காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்கிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து 68 நாட்களுக்கு பிறகு ஜூன் 1 முதல் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் துவங்கியது.  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர மற்ற 6 மண்டலங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் முதல் 2 தினங்கள் கொரோனா பரவல் அச்சத்தால் பஸ்களில் போதிய பயணிகள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. நேற்று முகூர்த்த நாள் என்பதால், பல நகரங்களில் கூட்டம், கூட்டமாக பஸ்களில் ஏறி படிக்கட்டுகளில் நின்றபடி பலர் பயணித்தனர்.

இதனால் சமூக இடைவெளி உத்தரவு காற்றில் பறந்தது. மக்கள் திமுதிமுவென பஸ்களில் ஏறுவதை தடுக்க முடியாமல் ஓட்டுனர், நடத்துனர் விழி பிதுங்கி நின்றனர். இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கம் என அரசு அறிவித்ததால், மக்களில் பலர் கடைசி பஸ் இரவு 9 மணிக்குத்தான் கிளம்புகிறேதோ என்ற எண்ணத்தில் பஸ் ஸ்டாண்டுக்கு குழந்தைகளுடன் வந்து விடுகின்றனர். ஆனால், பஸ்கள் மறுநாள் காலைதான் என்றதும்,  வேறு வழியின்றி பஸ் ஸ்டாண்டிலேயே தங்க வேண்டி உள்ளது. நேரக்கட்டுப்பாடு, ஊழியர்கள் தட்டுப்பாட்டால், மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் குறிப்பிட்ட ஓட்டல்கள் மட்டுமே பஸ் ஸ்டாண்டை சுற்றி செயல்படுகின்றன. இதனால் உணவு, பால் கூட கிடைக்காமல் அவதியடைகின்றனர்.  

அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் ஒருவர் கூறும்போது, ‘‘9 மணிக்குள் அனைத்து பஸ்களும் டெப்போவிற்கு சென்றுவிட வேண்டும் என்பதால், தூரத்தை கணக்கிட்டு, நேரத்திற்கு ஏற்றாற்போல பஸ்களை இயக்க வேண்டியுள்ளது. இதனால், பயணிகள் பஸ்களை தவறவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இரவு 10 மணி வரை பஸ்கள் இயக்கத்தை நீட்டித்தால், அனைத்து பயணிகளையும் அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்’’ என்றார்.

Related Stories: