ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திருப்பம்: ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

* 12 நாடுகளில் சொத்து குவிப்பு

* அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை இமெயில் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் அவர்கள் 12 நாடுகளில் சொத்து குவித்துள்ளதாகவும், 16 நாடுகளில் சட்ட விரோதமாக வங்கிக் கணக்கு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அதிகளவு வெளிநாடு முதலீடுகளை பெற்றுத் தர உதவி செய்ததாக புகார் எழுந்தது. இதன் மூலம், ப.சிதம்பரம் மகன் அவரது கார்த்தி சிதம்பரத்துக்கு பலன் கிடைத்தாக குற்றச்சாட்டும் கூறப்பட்டது.

 ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ-யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அக்டோபரில் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். 3 மாதங்களுக்கு மேல் டில்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஜாமின் கிடைத்தது. முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு முதலீடு செய்வதற்கு ப.சிதம்பரம் மற்றும் சிலர் ரூ.10 லட்சம் பணம் லஞ்சமாக வாங்கியதாக கூறியது.

கார்த்தி சிதம்பரத்தை பிப்ரவரி 2018ல் அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பிறகு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திராணி முகர்ஜியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மற்றும் பலர் மீது தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை அமலாக்க இயக்குநரகம் நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் (இமெயில்) மூலம் தாக்கல் செய்தது.  அதில், இந்திராணி முகர்ஜி மூலம் கிடைத்த பண பலன் மூலம், ஸ்பெயின், இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகளில் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். 16 நாடுகளில்

சட்ட விரோதமாக வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ தரப்பு ஏற்கனவே தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மேற்கண்ட நாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை தரப்பு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் மேற்கண்ட நாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதை மேலும் சில ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு அமலில் உள்ளதால் நீதிமன்றங்கள் திறக்கப்படவில்லை. அதனால், நீதிமன்றம் வழக்கமான பணிகளை தொடர்ந்த பின்னர் குற்றப்பத்திரிகை தொடர்பான மேலும் சில ஆவணங்களை அமலாக்கத்துறை நேரடியாக தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: