ஊரடங்கால் முடங்கிய குடும்பத்தை காப்பாற்ற சைக்கிளில் சென்று பலகாரம் விற்கும் மாணவன்: 3 பேரின் கல்வி செலவை மு.க.ஸ்டாலின் ஏற்றார்

தஞ்சை: தஞ்சைஅருகே மானோஜிப்பட்டி உப்பரிகையை சேர்ந்தவர் கொத்தனார் வரதராஜன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு அபிராமி(15), விஷ்ணு(12), குமரன்(9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். அரசு பள்ளியில் அபிராமி 10ம் வகுப்பும், விஷ்ணு 6ம் வகுப்பும், குமரன் 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.  நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட வரதராஜனால் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்ல முடியாததால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. சுமதி வீட்டில் இருந்தபடியே நூல் கண்டு தயாரிக்கும் கூலி வேலை செய்து வந்தார்.

அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை கொண்டு தனது குழந்தைகள், கணவனை கவனித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சுமதியை கடுமையாக பாதித்தது. ஒருபக்கம் முடங்கி கிடக்கும் கணவன், மறுபக்கம் 3 குழந்தைகள் என பரிதவித்தபடி இருந்தார். அம்மாவின் அழுகையை தாங்க முடியாமல் விஷ்ணு தவித்தான். இந்நிலையில் சுமதி தினமும் வடை, போண்டா சுட்டு கொடுக்க, அதனுடன் கடைக்கு சென்று மொத்தமாக சம்சா வாங்கி கொண்டு வியாபாரத்துக்கு சென்று அவற்றை விற்று வருகிறான் விஷ்ணு. தினமும் ரூ.100 வரை வருமானம் கிடைக்கிறது.

அதை கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடும்பத்தை சுமதி நடத்தி வருகிறார். இதுகுறித்து விஷ்ணு கூறியதாவது: அம்மா பலகாரம் சுட்டு கொடுப்பாங்க. நான் சைக்கிளில் எடுத்து கொண்டு 10 கிலோ மீட்டர் வரை சென்று விற்று வருகிறேன். காலை 8 மணிக்கு கிளம்பினால் மதியத்துக்கு மேல் தான் வீடு திரும்புவேன். வடை விற்காவிட்டால் அம்மாவை நினைச்சு அழுகை வரும். தொண்டை வலி, கால் வலி இருக்கும். என் குடும்பத்தை நினைத்தால் இந்த வலி பறந்து என்னை ஓட வைக்கும். பள்ளி திறந்ததும் படிக்க போய் விடுவேன்.

அப்பா, அம்மா என்ன செய்ய போறாங்கன்னு தெரியலை என்றார். சுமதி கூறுகையில்: கொரோனா ரூபத்தில் எங்கள் வீட்டில்  மண் விழுந்தது. என் மகன் வருமானத்தில் இப்போது  எங்கள் வீட்டில் அடுப்பு எரிகிறது என்றார். 3 பேரின் கல்வி செலவை ஏற்ற ஸ்டாலின்: சிறுவன் விஷ்ணு குடும்பத்தினரின் ஏழ்மை நிலையை ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவனது வீட்டுக்கு திமுக நிர்வாகிகளை அனுப்பி வைத்தார். அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள்,

விஷ்ணு குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்தித்து அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் சென்னையில் இருந்து தொலைபேசியில் விஷ்ணு குடும்பத்தினரிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஷ்ணு, அபிராமி, குமரன் ஆகியோரின் கல்வி செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்தார். மேலும் விஷ்ணுவின் குடும்ப நிலையை அறிந்த தஞ்சைவாசிகள் பலர் உதவ முன் வந்துள்ளனர்.

Related Stories: