திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீபமலையை வணங்கியபடி நந்தி பகவானுடன் அமர்ந்த நாய்

திருவண்ணாமலை:   திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீபமலையை வணங்கியபடி நந்தி பகவான் சிலையுடன் நாய் அமர்ந்திருந்த காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மலையே வடிவான மகேசனை வலம் வந்து அஷ்டலிங்கங்களை வணங்குகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பவுர்ணமி கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சோனாநதி குளத்தில் இருந்து சிறிது தூரத்தில் மலையை நோக்கி வணங்குவதுபோல் நந்தி பகவான் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை  அருகே நேற்று மதியம் நாய் ஒன்று அமர்ந்து இருந்தது. நந்தி பகவான் சிலை எவ்வாறு உள்ளதோ அதே தோற்றத்தில் நாயும் அமர்ந்து இருந்தது, நந்தியுடன் சேர்ந்து நாயும் தீபமலையை வணங்குவது போன்று காட்சியளித்தது. இந்த காட்சி அவ்வழியாக சென்ற பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Related Stories: