தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

சென்னை: தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதுதொடர்பாக தமுமுக அறக்கட்டளை தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சார்பில் வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், நாட்டிலேயே கொரோனா தொற்றில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் மற்றவர்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும்வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் தமுமுகவுக்கு வந்துள்ளன. கட்டணம் செலுத்த மறுக்கும் நோயாளிகளை பாதியிலேயே திருப்பி அனுப்பும் கொடுமையும் நடக்கிறது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவ செலவுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை வெளி்ப்படையாக தெரிவித்து, அதை வரைமுறைப்படுத்த வேண்டும்.

கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள இடவசதியை தாங்களாகவே முன்வந்து தார்மீக அடிப்படையில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கித் தர உத்தரவிட வேண்டும். பணம் இல்லை என்பதற்காக சிகிச்சை அளிக்க மறுப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது தனியார் மருத்துவமனைகளின் கடமையாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மற்ற மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. எனவே, தமிழக அரசும் அதுபோல வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி. தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக கூறிய நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனக்கூறி ஜவாஹிருல்லா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை நோயாளிகளுக்கு ஒதுக்க விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், பொதுப்படையான குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>