சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போதிய வரவேற்பு இல்லாததால் அரசு பஸ்கள் இயக்கம் குறைப்பு: 1,010ல் இருந்து 764 ஆக குறைந்தது

சேலம்: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ய 4 மாவட்டங்களிலும் மக்களிடம் வரவேற்பு அதிகபடியாக இல்லாததால், அரசு பஸ்கள் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.  கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 1ம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. இதில், மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதனுள் மட்டும் அரசு பஸ் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி நேற்று முன்தினம் (1ம் தேதி) சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில், சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 50 சதவீதமாக 559 பஸ்கள் (சேலம், நாமக்கல் மாவட்டம்) இயக்கப்பட்டது. இதுவே தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில் சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 451 அரசு பஸ்கள் (தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம்) இயக்கப்பட்டது.

Advertising
Advertising

கொரோனா அச்சம் காரணமாக பஸ்களில் செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. 2வது நாளான நேற்றைய தினமும் சேலம் பஸ் ஸ்டாண்டில், பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற பஸ்களில் 30 சதவீத பயணிகள் கூட செல்லவில்லை. இதனால், அந்த ஊர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கையை குறைத்தனர்.  இதேபோல், சேலம் மாவட்டத்திற்குள் இயங்கிய பஸ்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு இல்லை. அனுமதிக்கப்பட்ட 50 சதவீத சீட்கள் பூர்த்தியாகவில்லை. 10 முதல் 15 பயணிகளை ஏற்றிக் கொண்டு வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூருக்கு பஸ்கள் சென்றன. பயணித்த அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். மக்களிடம் வரவேற்பு இல்லாததால், ஒரே நாளில் பஸ்களின் இயக்க எண்ணிக்கையை  அதிகாரிகள் குறைத்துக் கொண்டனர்.சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 466 பஸ்களும் (முதல்நாளில் 559), தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 298 பஸ்களும் (முதல்நாளில் 451) இயக்கப்பட்டது.

இது ஒட்டுமொத்தமாக சேலம் மண்டலத்தில் 764 பஸ்களாக இயங்கியது. ஒரேநாளில் 236 பஸ்களின் இயக்கத்தை அதிகாரிகள் நிறுத்திக் கொண்டனர். இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊரடங்கு தளர்வு என்பது பாதியாகவே இருக்கிறது. அதேபோல், மண்டலத்திற்குள் தான் பஸ்கள் இயக்க வேண்டியிருக்கிறது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக பஸ்களை பயன்படுத்தும் மக்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்குகிறோம். எந்த வழித்தடத்திலும் பஸ் இயக்கத்தை நிறுத்தவில்லை. மாறாக அதிக பஸ்கள் சென்ற வழித்தடத்தில், போதிய அளவு மட்டும் இயக்குகிறோம். வரும் நாட்களில் மக்களிடம் வரவேற்பு ஏற்பட்டு, அதிகப்படியானோர் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றனர்.

Related Stories: