அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு நெல்லை, தென்காசியில் இதமான சாரல் காற்று : கார் சாகுபடி பணிகள் தொடக்கம்

நெல்லை:  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இதமான சாரல் காற்று வீசி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் தற்போது ரம்மியமான சூழலில் மேகமூட்டத்தோடு காணப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மே மாதத்தில் கோடை வெயில் கொளுத்துவது வழக்கம். இவ்வாண்டு வழக்கத்திற்கு மாறாக காலையில் வெயில் கொளுத்துவதும், பிற்பகலில் மேகங்கள் கறுத்து, லேசான மழை பெய்வதுமாக இருந்தது. இந்நிலையில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தொடங்கியது. இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக குளிர் காற்று வீசி வருகிறது. களக்காடு தொடங்கி மணிமுத்தாறு, பாபநாசம், குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் மேக மூட்டமும், அடிக்கடி சாரல் மழையும் பெய்த வண்ணமாக இருந்தன. மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதிகளில் மேகங்கள் திரண்டு நேற்று ரம்மியமாக காட்சியளித்தன. மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பினும், சாரல் மழையால் தண்ணீர் குளுமையாக விழ தொடங்கியுள்ளது.

மலை பகுதிகளில் அடிக்கடி தூறல் விழுவதால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 35.95 அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 48.92 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 71.20 அடியாகவும் உள்ளது. பாபநாசத்தில் 2 மிமீ மழையும், சேர்வலாறு 2 மிமீ, மணிமுத்தாறு 3.40 மிமீ, கொடுமுடியாறு 12 மிமீ மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அணையோர விவசாயிகளும், பிரதான கால்வாய் விவசாயிகளும் இப்போதே கார் சாகுபடிக்கான பணிகளை தொடங்கி உள்ளனர். வேளாண் துறை இவ்வாண்டு கார் சாகுபடிக்கு 15 ஆயிரம் எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதற்கேற்ப அம்பை, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன்பட்டி பகுதிகளில் விவசாயிகள் சாகுபடிக்கு நாற்றுநடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மணிமுத்தாறு பிரதான கால்வாய் பகுதியில் மட்டுமே 1300 ஏக்கரில் சாகுபடி பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த பிசான சாகுபடியில் 68 ஆயிரம் எக்டேர் இலக்கை வேளாண் துறை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் தொடங்கியதாலும், அணைகளில் ஓரளவுக்கு நீர் இருப்பதாலும் கார் சாகுபடியும் கை கூடுவது நிச்சயம். விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவை தேவையான அளவு இருப்பு

வைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

Related Stories: