உளுந்தூர்பேட்டை அருகே குடோனில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பிரபல கடத்தல் மன்னன் உள்பட 9 பேர் கைது

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே குடோனில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், பாபு, லட்சுமிநாராயணன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிளியூர் ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள குடோனில் இருந்து ரேஷன் அரிசியை லாரியில் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்ற பிரபல அரிசி கடத்தல் மன்னன் விழுப்புரத்தை சேர்ந்த பஷீர்அகம்மது மகன் இப்ராகிம்சு கர்ணா(42) மற்றும் சுலைமான், மணிமாறன், விவேகானந்தன், முருகன் உள்ளிட்ட 9 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் குடோனில் பதுக்கி வைத்து இருந்த 29 டன் ரேஷன் அரிசி, லாரி, மினி லாரி, கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

லாரியில் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்திற்கு கடத்தி செல்லும்போது போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க லாரியின் கீழ் பகுதியில் ரேஷன் அரிசியை அடுக்கி வைத்து விட்டு மேல் பகுதியில் தவிடு மூட்டைகளை அடுக்கி ரேஷன் அரிசியை வெளி மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் லாரியின் முன்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் லாரி, தடை செய்ய வேண்டாம் என்ற அரசு அனுமதி பெற்ற ஸ்டிக்கர் லாரி கண்ணாடியில் ஒட்டப்பட்டு ரேஷன் அரிசியை கடத்தி சென்றுள்ளனர். ரேஷன் கடைகளுக்கு வரும் அதே மூட்டைகள் இந்த குடோனில் சீல் கூட பிரிக்காமல் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் ரேஷன் கடையில் இருந்து நேரடியாக அரிசி கொண்டு வந்து இவர்களிடம் விற்பனை செய்யப்பட்டதா என்றும், எந்தெந்த கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை மூட்டைகளாக கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: