பஸ்சில் பயணம் செய்ய மக்கள் அச்சம் 2வது நாளாக பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது: 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியும், பயணம் செய்ய மக்களிடம் அச்சம் நீடிக்கிறது. அதனால், பெரும்பாலான பஸ்களில் பயணிகள் இல்லாமல் நேற்றும் வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பரவல் அச்சமும், பீதியும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 245ஆக அதிகரித்துள்ளது. அதனால், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவலாகியிருக்கிறது. தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலுமாக தளர்ந்திருப்பதால், இனி வரும் நாட்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மிகப்பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் (1ம் தேதி) பஸ் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 50 சதவீத பஸ்களை இயக்கவும், ஒவ்வொரு பஸ்சிலும் இருக்கை எண்ணிக்கை அடிப்படையில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்லவும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பஸ்சில் பயணம் செய்ய மக்களிடம் ஆர்வம் இல்லை. அதனால், பஸ் போக்குவரத்து தொடங்கிய இரண்டாம் நாளான நேற்றும் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் வெளியூர் பயணிகளால் பரபரப்பாக காணப்படும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில், வரிசையாக பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டு பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பயணம் செய்த பயணிகளை, தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை கருவி மூலம் பரிசோதித்த பிறகே பயணிக்க அனுமதித்தனர்.மேலும், நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து கடலூர் சென்று திரும்பிய பஸ் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான தகவலால், நேற்று பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மேலும், டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இருக்கைக்கு அருகே பயணிகள் உட்கார அச்சப்பட்டனர்.பயணிகள் கூட்டம் இல்லாத காரணத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 30 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பஸ் நிலையம் வரை வந்த பஸ்களும், பயணிகள் இல்லாததால் பணிமனைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்லும் பஸ்களில் மட்டும் ஒருசிலர் பயணித்தனர். திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு சென்ற பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.

வந்தவாசி: வந்தவாசியில் உள்ள 2 அரசு போக்குவரத்து பணிமனைகளிலும் இருந்து, நேற்று முன்தினம் முதல் விழுப்புரம், போளூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, திண்டிவனம், செய்யாறு, ஆரணி உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும், வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் 35 பஸ்கள் இயக்கப்பட்டது.அதன்படி, நேற்று முன்தினம் செய்யாறு சாலையில் உள்ள பணிமனையில் இருந்து 18 பஸ்கள் இயக்கப்பட்டதில், சுமார் 1,600 கி.மீ. தூரம் சென்ற பஸ்களின் மூலம் ₹9,400 கலெக்‌ஷன் ஆனது. அதேபோல், திண்டிவனம் சாலையில் உள்ள பணிமனையில் இருந்து 17 பஸ்கள் இயக்கப்பட்டதில், சுமார் 548 கி.மீ. தூரம் சென்ற பஸ்களின் மூலம் ₹4,285 கலெக்‌ஷன் ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலெக்‌ஷன் ₹17 ஆயிரம்... டீசல் செலவு ₹1 லட்சம்...

போளூர் அரசு பணிமனையில் இருந்து நேற்று முன்தினம் 15 புறநகர், 6 டவுன் பஸ்கள் என மொத்தம் 21 பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால், எந்த பஸ்சிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 32 பேர் பயணம் செய்யவில்லை. சில பஸ்களில் 3 பேர், 5 பேர் மட்டுமே பயணம் செய்தனர். இதனால் 21 பஸ்கள் ஓடியதில் ₹17 ஆயிரம் மட்டுமே கலெக்‌ஷன் ஆனது, ஆனால் டீசலுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: