போர் பதற்றத்தை தணிக்க தீவிர முயற்சி; இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ல் பேச்சுவார்த்தை...!

டெல்லி: இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தியா - சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாக கூறப்பட்டு வருகிறது. லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆனால், இது குறித்த நிலைப்பாட்டை இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் மறுப்பு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சனை தலைவிரித்து ஆடி வரும் நிலையில், கொரோனாவை எதிர்த்து போராடுவது தான் இரு நாடுகளுக்கும் இலக்காக உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், இரு தரப்பு பேதங்களை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். இந்தியா - சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம். இந்தியா - சீனா இடையிலான உறவினை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இரு நாடுகளுக்கிடையே எந்த அச்சுறுத்தலும் இல்லை. கருத்து வேறுபாடுகள் நம் உறவுகளை மறைக்கின்றன. நாம் ஒருபோதும் அதனை விட்டு விடக்கூடாது, என்றார். இதனைபோல், இந்தியாவுடன் எல்லை நிலையாகவும்  கட்டுக்குள் உள்ளது. இப்பிரச்னையில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் தீர்வு காணும் வழிமுறைகளும் இரு நாடுகள் இடையே உள்ளதாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் நடந்து வரும் சர்ச்சையை தீர்க்க இந்தியா-சீனா இருநாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த பேச்சுவார்தையின் மூலம் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: