×

புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கன் என்ற கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டிரிய ரைபிள், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த வீட்டில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புல்வாமா மாவட்டத்தில் இணைய சேவையானது துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று ரஜோரி என்ற மாவட்டத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Jaish-e-Mohammed ,militants ,Pulwama ,encounter ,terrorists , Pulwama, Jaish-e-Mohammed, terrorists, Encounter, Security Force
× RELATED காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை