முதல்வர் துவக்கி வைத்த திட்டத்தில் 93 நாளாகியும் கிராமங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை: பல இடங்களில் உடைப்பெடுத்து வீணாகிறது

விருதுநகர்: விருதுநகர் ஒன்றிய கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டு 93 நாட்களாகியும் தண்ணீர் போய் சேரவில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கிராம ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.236 கோடியில் 2010ல் பணிகள் துவக்கப்பட்டு 10 ஆண்டுகளாக தரமற்ற வகையில் வேலை நடந்துவந்தது. குடிநீர் பணிகள் முடிவடையாமலேயே 2020 மார்ச் 1ல் முதல்வரால் அரைகுறையாக திறந்து வைக்கப்பட்டது. முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்களில் உடைப்பு எடுத்து தண்ணீர் சாலையோரங்களில் குளம் போல் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. விருதுநகர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் தாமிரபரணி தண்ணீரை வைத்து நிலைமையை சமாளித்து விடலாம் என ஊராட்சி நிர்வாகங்கள் நினைத்திருந்தன.

ஆனால் முதல்வர் துவக்கி வைத்து 93 நாட்களாகியும் பல ஊராட்சிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. பல ஊராட்சிகளில் 20 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. விருதுநகர் சிவகாசி ரோட்டிலும், மதுரை ரோடு நான்குவழிச்சாலையில் பொதுப்பணித்துறை விடுதிக்கு எதிரேயும் குழாய் உடைந்து தண்ணீர் பீச்சி அடிக்கிறது. இதனால் சிவஞானபுரம், சத்திரரெட்டியபட்டி ஊராட்சிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. அதேபோல் ரோசல்பட்டி ஊராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் சென்று சேரவில்லை. இதனால் ரோசல்பட்டி ஊராட்சியில் 40 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. முதல்வர் துவக்கி வைத்த தாமிரபரணி கூட்டுக்குடித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை விரைவாக சரிசெய்து வறட்சி தாண்டவம் ஆடும் ஊராட்சிகளில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: