இ-பாஸ் கட்டாயம் என்பதால் ஆர்வமில்லை காலியாக செல்லும் காட்பாடி சிறப்பு ரயில்: 30 முதல் 40 சதவீத பயணிகளே புக்கிங்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வழியே காட்பாடி செல்லும் சிறப்பு ரயில், காலியாக செல்கிறது. இ-பாஸ் கட்டாயம் என்பதால், 30 முதல் 40 சதவீத பயணிகளே புக்கிங் செய்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கால் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறப்பு ரயில்களை முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்குகின்றனர். தமிழகத்தில், கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி, திருச்சி-நாகர்கோவில், மதுரை-விழுப்புரம் இடையே இந்த 4 ரயில்களும் இயக்கப்படுகிறது. தமிழக அரசு பிரித்துள்ள மண்டலங்களின்படி, இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள், இ-பாஸ் பெற வேண்டும். கோவை-காட்பாடி ரயிலை பொருத்தவரை கோவையில் இருந்து சேலம் வரை வருவதற்கு இ-ஸ் தேவையில்லை. அதேவேளையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் இருந்து ஜோலார்பேட்டைக்கோ, காட்பாடிக்கோ செல்ல வேண்டும் என்றால், கட்டாயம் இ-பாஸ் வேண்டும். இன்டர்சிட்டி விரைவு ரயில் என்பதால், ஏசி சேர் கார் மற்றும் இரண்டாம் வகுப்பு சேர்கார் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதே இ-பாஸ் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Advertising
Advertising

இதன்காரணமாக கோவை-காட்பாடி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணிக்க மக்களிடம் ஆர்வமில்லை. கடந்த 2 நாட்காக இந்த ரயில், சேலம் வழியே காலியாகவே காட்பாடிக்கு செல்கிறது. 30 முதல் 40 சதவீத பயணிகளே பயணிக்கின்றனர். 23 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பெரும்பாலான சீட்கள் காலியாக உள்ளது. இன்று (3ம் தேதி) பயணிக்க நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி ஏசி சேர்காரில் 82 சீட்டும், இரண்டாம் வகுப்பில் 752 சீட்டும் புக்கிங் செய்யப்படாமல் காலியாக இருந்தது. இதுவே வரும் 4, 5, 6, 7, 8ம் தேதிகளிலும் 1000க்கும் அதிகமான சீட்களில் புக்கிங் ஆகாமல் உள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்பட்டால், பயணிகள் அதிகளவு செல்வார்கள். ஆனால், சென்னைக்கு எந்த ரயிலும் கிடையாது என்பதால், காட்பாடிக்கு இயக்கப்படுகிறது. மண்டலம் விட்டு மண்டலம் செல்லும்போது, இ-பாஸ் கட்டாயம். அதனாலும், மக்கள் அதிகளவு வருவதில்லை. காட்பாடியில் இறங்கும் பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் பணியும் நடக்கிறது. இதன்காரணமாக வெளியூர்களில் சிக்கி இருந்தவர்கள் மட்டும், இந்த ரயிலில் செல்கின்றனர். வேலை விஷயமாக செல்வோர் யாரும் இல்லை. தினமும் 40 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளே பயணிக்கின்றனர். இதை அதிகரிக்க தற்போது வேறு வழிகள் எதுவும் இல்லை,’’ என்றனர்.

Related Stories: