இன்று பிற்பகலில் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கிறது நிசார்கா புயல்

புதுடெல்லி: அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘நிசார்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ‘நிசார்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ‘நிசார்கா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. புயல் மும்பையில் இருந்து 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசார்கா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவின் மும்பையும் கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும். இதனால் இரு மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் புயல் தாக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து புறப்படும் மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்கள் மற்றும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்திற்குள் மும்பைக்கு வரும் 12 விமானங்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று நள்ளிரவு முதல் நாளை பிற்பகல் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரையை ஒட்டியுள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுரை வழங்கியுள்ளனர்.

Related Stories: