×

மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது சென்னையில் பாதிப்பு அதிகம் ஏன்? : முதல்வர் பரபரப்பு பேச்சு

சென்னை:சென்னையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னை மாநகராட்சியில் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ்  தொற்று பரவலை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்திலே சென்னையில் தான் இந்த வைரஸ் தொற்று அதிகளவில் காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலெல்லாம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. சென்னையில் 87 லட்சம் பேர் வசிக்கக்கூடிய மிகப் பெரிய நகரம். இங்கே குறுகலான தெருக்கள், அதிக நெரிசலாக அமைந்துள்ள வீடுகள் உள்ளதாலும், நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி விடுகிறது. அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று இவ்வளவு பேருக்கு பரவியிருக்காது.   

 கொரோனா தொற்று உள்ள ஒருவரோடு 10 நிமிடம், 20 நிமிடம் பேசினாலே தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். யாரிடம் தொற்று உள்ளது என்றே தெரியவில்லை. அதனால் தான் நோய் அதிகமாக பரவியுள்ளது. இருந்தாலும், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். தமிழகத்துக்கு இதுவரை வரப்பெற்ற பிசிஆர் கிட் 11,51,700, நன்கொடை மூலமாக பெறப்பட்டது 53,516, மத்திய அரசு வழங்கியது 50,000. எல்லாவற்றையும் சேர்த்து இதுவரை பெறப்பட்டவை 12,55,216. அதோடு இதுவரைக்கும் 7,95,416 நாம் கொடுத்திருக்கிறோம். அதில் 5,03,331 பரிசோதனைகள் செய்திருக்கிறோம். மீதி 2,92,077 இன்றைக்கு ஆங்காங்கே அந்தந்த முகாமில் இருக்கிறது. இன்றைக்கு நம்மிடம் ,இருப்பு 4,51,800 இருக்கிறது.  இன்றைக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் இருந்தாலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. ஆகவே, சென்னை மாநகர மக்கள் அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும்.   இவ்வாறு அவர் பேசினார்.

ரேஷன் கார்டுகளுக்கு இலவச மாஸ்க்
சென்னையில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு என்னென்ன வழிகளில் முயற்சி செய்ய வேண்டுமோ, அத்தனை வழிகளிலும் முயற்சி செய்கிறோம். அதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சியில், 1.5 கோடி மாஸ்க் வாங்கி ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த வேண்டும் மேலும், எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசாங்கமே விலையில்லாமல் முகக்கவசம் வழங்குவதற்கு அரசு பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. அதாவது 2.1 கோடி குடும்பத்தை சார்ந்த சுமார் 7 கோடி பேருக்கு தலா 2 முகக்கவசம் வீதம் 14 கோடி முகக்கவசங்கள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.



Tags : Corona ,districts ,Chennai ,Chief Minister , Districts, Corona, Madras, CM
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...