கொரோனா கட்டுப்பாடுகளால் ஈரோடு ஜவுளிசந்தை வெறிச்சோடியது:10% மட்டுமே விற்பனை,..வியாபாரிகள் கவலை

ஈரோடு: ஈரோட்டில் நேற்று கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது. 10 சதவீதம் மட்டுமே விற்பனையானதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.  தமிழகத்தின் மிகப்பெரிய ஜவுளிசந்தை ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் கனி மார்க்கெட். இங்கு திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நடைபெறும் வாரச்சந்தை பிரசித்தி பெற்றது. இந்த சந்தையில் ஜவுளிகளை கொள்முதல் செய்ய பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.  கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் ஜவுளிசந்தை மூடப்பட்டது. இதனால், 150 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

 தற்போது, கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளுடன் ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிசந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நாளான நேற்று நடந்த ஜவுளிசந்தையில் 10 சதவீதம் அளவிற்கே விற்பனை இருந்தது. போதிய வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிசந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் இருந்து வந்தன. வாரச்சந்தை நடைபெறும் நாளில் பிளாட்பார கடைகளும் அதிகமாக இருக்கும். ஆனால், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தொழில் நடத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

ஏற்கெனவே, காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போது ஒருமணி நேரம் கூடுதலாக நேரம் கொடுத்து மாலை 6 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளனர். பஸ் போக்குவரத்தும் தமிழகம் முழுவதும் இல்லாத நிலையில் சில்லறை வியாபாரிகள், பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே உள்ளது. போதிய அளவு வியாபாரமும் இல்லை. அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ்களை இயக்கினால் மட்டுமே ஜவுளி வியாபாரம் ஓரளவிற்கு இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* ஊரடங்கால் மூடப்பட்டதால், ஈரோடு ஜவுளிச்சந்தையில் கடந்த மாதம் 150 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

* கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், நேற்று இங்கு வாரச்சந்தை இயங்கியது.

* ஆனால், வழக்கமான வியாபாரத்தில் 10 சதவீத விற்பனை மட்டுமே நடந்தது.

Related Stories: