எச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்

புதுடெல்லி: பந்தை பளபளப்பாக்க  எச்சில் பயன்படுத்த தடைவிதிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதற்கு மாற்று பொருளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று இந்திய வேகம் ஜஸ்பிரித் பும்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து பும்ரா கூறியதாவது: விக்கெட் வீழ்த்தும்  நேரங்களில்  சக வீரர்களை கட்டியணைக்க, கை குலுக்க  தடை விதிக்கப்பட்டால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை .  காரணம் அவற்றில் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை.  ஆனால், பந்தை பளபளப்பாக்க தடை  விதிக்க பரிந்துரைத்திருப்பதுதான் பிரச்னை. அந்த தடை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். மீண்டும்  கிரிக்கெட் தொடங்கும்போது  என்ன மாதிரியான வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.  பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதிலாக ஒரு மாற்று  இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பந்தை இதுபோல் வழக்கமான முறையில் பளபளப்பாக்கி பராமரிக்காவிட்டால் பந்துவீச்சாளர்களுக்கு தான் சிரமம். விக்கெட்  வீழ்த்துவது அதைவிட சிரமம்.  அதனால்தான் பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதிலாக மாற்று தேவை என்று  கேட்கிறேன். எனக்கு பிடித்த டெஸ்ட் போட்டிகளில்  இது பெரிய பிரச்னையாக இருக்காது. ஆனால் ஒருநாள், டி20 போட்டிகளில் ஒரே நாளில் 2 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.   பந்தை வழக்கமான முறையில்  பளபளப்பாக்காவிட்டால்  அது ரிவர்ஸ்  ஸ்விங் ஆகாது. அதனால் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன்… எச்சிலுக்கு மாற்று அவசியம் வேண்டும் .இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.

Related Stories: