ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் 2.12 கோடி முறைகேடு வழக்கில் 27 பேர் கைது: 83.40 லட்சம் பறிமுதல்

திருமலை: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் 2.12 கோடி முறைகேடு வழக்கில் 27 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் ஸ்ரீசைலம் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் நடைபெறும் அபிஷேகம், கல்யாண உற்சவம் உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கு ஒப்பந்த ஊழியர்கள் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் கடந்த 4 ஆண்டுகளாக முறைகேடு நடந்திருப்பதாக ஊழியர்களில் சிலர் ஒருவருக்கொருவர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீசைலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 2.12 கோடி வரை முறைகேடு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், ஊழியர்கள் பணி முடிக்கும் போதும் மீண்டும் பணியில் சேரும்போது போலி ஐடி மற்றும் பாஸ்வோர்டு பயன்படுத்தி முறைகேடு செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இதில் 3 நிரந்தர பணியாளர்கள், 24 ஒப்பந்த பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 83 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: