×

அசாமில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

கவுகாத்தி: அசாமில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசாமில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலைபாங்கான மாநிலம் என்பதால், பல இடங்களில் சிறிய அளவில் பாறைகள் உருண்டும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அம்மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று திடீரென பயங்கர  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், பலர் புதையுண்டு இருக்கலாம் என்பதால், மாநில பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவுகளைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார். இதற்கிடையே, பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாநிலத்தில் வெள்ளத்தால் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 348 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 27,000 ஹெக்டேர் பயிர் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது’’ என்று கூறியுள்ளது. தொடர் மழையால் அசாமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கோல்பாரா மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, நாகான் மற்றும் ஹோஜாய் மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.


Tags : landslide ,Assam , Assam landslide, 20 people killed
× RELATED மங்களூருவில் கனமழைக் காரணமாக நிலச்சரிவு