×

கடந்த 22 ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி

* மூடிஸ் சர்வதேச ஆய்வு நிறுவனம் கணிப்பு
* வளர்ச்சியை எட்டும் என மோடி நம்பிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என மூடிஸ் சர்வதேச ஆய்வு நிறுவனம் கணித்துள்ள நிலையில், ‘‘இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்,’’ என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச கடன்தர நிர்ணய ஆய்வு நிறுவனமான மூடிஸ் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கடன்தர குறியீட்டை பிஏஏ2-வில் இருந்து பிஏஏ3 என குறைத்து நேற்று தனது மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது. அதாவது, பிரதமர் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தங்களால் கடந்த 2018ல் இந்தியாவின் கடன் தர குறியீடு பிஏஏ2 ஆக தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால், அந்த சீர்த்திருத்தங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதாலும், பல தவறான கொள்கை முடிவுகள், கொரோனா பாதிப்புகள் ஆகியவற்றாலும் மீண்டும் இந்தியாவின் கடன் தர குறியீடு பிஏஏ3 என சரிந்துள்ளது.

பிஏஏ3 என்பது முதலீடு செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் கடைசி ரகமாகும். அதாவது, முதலீடு செய்வதற்கு உகந்த நாடுகளில் இல்லாத பட்டியலுக்கு முந்தைய இடத்தில் இந்தியா இருக்கிறது. மூடிஸ் கணிப்பால், இனி சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய சற்று அச்சம் கொள்ளும். அதோடு, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4% ஆக மட்டுமே இருக்கும் என்றும் மூடிஸ் கணித்துள்ளது. இது, பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகள் தோல்வி அடைந்திருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.  இந்நிலையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) 125ம் ஆண்டு நிறைவு விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஒருபுறம் வைரசை எதிர்த்து போராட கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மறுபுறம் பொருளாதாரத்தையும் கவனித்துள்ளோம்.

இந்திய தொழில்துறை வளர்ச்சியை திரும்பப் பெறுவது பற்றி பேசத் தொடங்கி உள்ளது. நிச்சயமாக எங்கள் வளர்ச்சியை நாங்கள் திரும்பப் பெறுவோம். அதை அடைய விவசாயிகள், சிறு தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் உதவுவார்கள். சீர்த்திருத்தங்கள் என்பது முடிவுகளை தைரியமாக எடுத்தல் என்று அர்த்தம். நாட்டின் பொருளாதார போக்கை மாற்றும் வகையில் கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள் மேலும் தொடரும். தனியார் நிறுவனங்களுக்கு வசதியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்த அரசு முயற்சிக்கிறது. இதனால், முக்கிய பல துறைகளில் தனியார் முதலீடு செய்ய அனுமதித்தது. மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தொழிலாளர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளர்ச்சியைத் திரும்பப் பெறுவது அவ்வளவு கடினம் அல்ல, அதற்கான பாதை ஆத்மனிர்பார் பாரத். தற்சார்பு இந்தியா என்றால் நாடு வலுவடைவதன் மூலம் உலகை அரவணைக்கும். தற்சார்பு இந்தியா உலகப் பொருளாதாரத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும், மேலும், ஆதரவாக இருக்கும்.

உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த, வலுவான உள்ளூர் விநியோகச் சங்கிலியில் நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த சவாலான நேரத்தில் இந்திய தொழில் நிறுவனங்கள் கிராமப்புற இந்தியாவை கூட்டாளியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதன் மூலம், மேட் இன் இந்தியா மற்றும் மேட் ஃபார் தி வேர்ல்ட் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். பொருளாதாரத்தை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மோசமான முதலீடு தரம் ராகுல் காந்தி விமர்சனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘மோடியின் பொருளாதாரத்தை கையாளும் விதத்திற்கு மூடிஸ் கடைசிக்கு முந்தைய இடத்தை கொடுத்துள்ளது. ஏழைகள், சிறு, குறு நிறுவனங்கள் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பது, இன்னும் மோசமான நிலையை வரவழைக்கும்’’ என்றார்.

‘விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் பகல் கனவாகிவிடும்’
காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகள் நலனில் இந்த அரசு அக்கறை கொண்டிருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அப்படி அக்கறை கொண்டிருந்தால் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்காக நிலுவை தொகையை வழங்கிட வேண்டும். பெரும்பாலான ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் குறைவாகவே கொள்முதல் செய்கின்றன. அரசு கொள்முதல் விலையை உயர்த்தியும் அதற்கான பலன் விவசாயிகளை சென்றடைவதில்லை. எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இல்லாவிட்டால், 2022க்குள் விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்கும் பிரதமர் மோடியின் அறிவிப்பு பகல் கனவாகவே இருந்து விடும்,’’ என்றார்.

Tags : standstill ,Indian ,standtill , Indian Economy Fall, Modi, Moody's International Review
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...