வன்முறையாளர்களை ஒடுக்க ராணுவம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பர் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டை போலீசார் கொன்றதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தையும், கலவரத்தையும் ராணுவத்தை கொண்டு ஒடுக்கப் போவதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் மின்னியாபோலிஸ் நகரத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட போது போலீஸ் அதிகாரியால் மிதித்து கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  போலீஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களின் போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள் அத்துமீறி வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக நடக்கும் போராட்டத்தின் போது வன்முறை, கலவரம், கொள்ளை, தாக்குதல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் நடந்து வருகிறது.  இவற்றை கட்டுப்படுத்த தேவையான ராணுவம், போலீஸ் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும்படி அனைத்து மாகாண ஆளுநர்கள், மேயர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மக்கள், பொது சொத்துகளை பாதுகாக்க தவறினால், அப்பகுதிகளில் பிரச்னைக்கு தீர்வு காண ராணுவம் களம் இறக்கப்படும்.

கடந்த சில நாட்களாக நாடு அராஜகவாதிகள், வன்முறை கும்பல்கள், பொது சொத்துகளை தீயிட்டு எரிப்பவர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள், கலகக்காரர்களின் கையில் சிக்கி உள்ளது. இது அமைதியான முறையில் நடக்கும் போராட்டம் அல்ல.  ஜார்ஜ் பிளாய்ட்டின் கொடூர கொலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவரது இறப்புக்கு காரணமான போலீஸ் அதிகாரி டெரிக் சவ்வின் நீதியின் முன் நிறுத்தப்படுவார். தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். லிங்கன் நினைவு சதுக்கம், இரண்டாம் உலகப் போர் நினைவு சதுக்கம் ஆகியவை சூறையாடப்பட்டுள்ளன. வரலாற்று புகழ் வாய்ந்த தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக இவற்றை பாதுகாக்கவும், மக்களுக்காகவும் போராடுவேன். சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கும் அதிபராகவும் அமைதியான முறையில் போராடுபவர்களுக்கு தோழனாகவும் இருப்பேன். அமெரிக்காவின் தற்போதைய தேவை படைப்புகளே தவிர, அழிவுகள் அல்ல. ஒற்றுமை தேவையே தவிர எதிர்ப்பு அல்ல. மாலை 7 மணி வரையிலான ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். அப்பாவி மக்களின் வாழ்க்கை, சொத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாயை மூடிகிட்டு சும்மா இருங்க...

டெக்சஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத் தலைமை காவல் அதிகாரி ஆர்ட் அசிவெடோ கூறுகையில், ``போலீசாரை கொண்டு கலவரக்காரர்களை கட்டுப்படுத்த ஆளுநர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் எல்லை மீறி விடுவார்கள் என்று கூறுகிறீர்கள். இது யார் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை பற்றியது அல்ல. மக்களின் மனதையும், இதயத்தையும் வெல்வது பற்றியது. இரக்கத்தையும், பலவீனத்தையும் இணைத்து குழப்பி கொள்ள வேண்டாம். இயல்பு நிலை திரும்புவதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகளை அறியாமையினால் அழித்து விடாதீர்கள். உங்களுக்கு ஆக்கபூர்வமாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றால், வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருங்கள்,’’ என்றார் ஆவேசமாக.

Related Stories: