×

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் செய்யக் கோரிய மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்தது. நிதி ரீதியாக இது ஏற்கக் கூடியதல்ல என பதிலளித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டது. இந்த திட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை போல நிலையான ஓய்வூதிய தொகையை வழங்கவில்லை என சில அரசு ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்த்து வருகின்றனர். இதற்கிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான தேசிய இயக்கத்தின் டெல்லி பிரிவு தலைவர் மன்ஜீத் சிங், பிரதமர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், தற்போதைய திட்டத்தில் பெரும்பாலான நிதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பழைய ஓய்வூதிய திட்டம் எனில், கொரோனா மீட்பு பணிகளுக்கு அரசு அப்பணத்தை பயன்படுத்த உதவியாக இருக்கும்’ என கூறி உள்ளார். இதற்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது. அதில், ‘பங்குச்சந்தையுடன் தேசிய ஓய்வூதிய திட்டம் இணைக்கப்பட்டிருந்தாலும், அதன் முதலீடுகள் விவேகமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், உகந்த வருவாயை அது உறுதி செய்யும். மேலும், மனுதாரரின் கோரிக்கை நிதி ரீதியாக நியாயமானது அல்ல. ஏனெனில், மிகப்பெரிய தொகையை திரும்பப் பெறுவது, சந்தைகளில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் மோசமான நிதி தாக்கங்களையும் ஏற்படுத்தும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : National Pension Scheme, Central Govt
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு...