விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வர வேண்டும்: முதல்வர் எடப்பாடி கடிதம் மூலம் அழைப்பு

சென்னை: விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்களின்  தலைவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி அழைப்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு ெவளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது உலகளவில் வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் யுனைடெட் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கிரிகோரி ஜே ஹேயஸ், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லாரன்ஸ் கல்ப், போயிங் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தவே கல்ஹவுன், லாக்ஹீட் மார்டின்  நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மரிலின் ஹீவ்சன், சாப்ரான் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பிலிப் பெட்டிட்கோலின்,

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் வாரன் ஈஸ்ட், ஏர்பஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கைலம் பவுரி, லியானார்டோ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் அலெசாண்ட்ரோ புரபியுமோ மற்றும் ஹனிவெல் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் டேரிபஸ் ஆடம்சைக் ஆகிய 9 முன்னணி வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும்  குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: