சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளரின் கார் டிரைவர் கொரேனாவால் உயிரிழப்பு: இதுவரை ரயில்வே ஊழியர்கள் 3 பேர் பலி

சென்னை: சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளரின் கார் டிரைவர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுவரை ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களாக சென்னையில்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் தோறும் 500ஐ தாண்டுகிறது. இதேபோல், தெற்கு ரயில்வேயில் 81க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் கூடுதல் மேலாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தைத்தொடர்ந்து 42 வயதான அவரது கார் டிரைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.இதுவரையில் ரயில்வே ஊழியர்கள் 3 பேர் கொரோனா பாதிகப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: