தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம்?ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.ராஜேஷ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு அரசு 4500 நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அந்த கட்டணத்துக்கு அதிகமாக 6,000 முதல் 8,000 வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கிறார்கள். சிகிச்சைக்கு வருபவர்களிடம்  லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு முழு உடல் கவசத்திற்கு 10,000 வசூலிக்கப்படுகிறது. வென்டிலேட்டர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதமும், ₹5 ஆயிரம் முதல் ₹12,000 வரை அறை வாடகையாகவும் வசூலிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரசுக்கு அளிக்கும் சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் சிகிச்சைக்கான கட்டணம் இன்சூரன்ஸ் தொகையிலிருந்து எடுக்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் 4ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், அந்த சுற்றறிக்கையையும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவில்லை.

எனவே, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க, கண்காணிப்பு குழு அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: