திட்டமிட்டு கொரோனா இறப்பை மறைக்கிறதா தமிழக அரசு சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்கள் பலி?

* மவுனம் தகர்த்த மயானங்களால் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்கள்

* கணக்கில் காட்டாத தனியார் மருத்துவமனைகள்

* நீரிழிவு, ஆஸ்துமா, கல்லீரல் கோளாறு என

* கொரோனா பலிகளை திசை திருப்பும் அவலம்

சென்னை: சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 500க்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம்் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது. இதில் பெரும்பாலான மரணங்களை அரசு வேறு நோய்களின் பெயரில் மறைப்பதாகவும், தனியார் மருத்துவமனை மரணங்கள் கணக்கில் காட்டப்படுவது இல்லை என்று தகவல் வெளிகியாகிவுள்ளது. கொரோனா உயிரிழப்பு மர்மங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியே கசிந்து ெகாண்டிருப்பதால் அரசு உண்மையை சொல்ல முடியாமல் திணறி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா சமூக பரவலாகவே மாறிவிட்டது. சென்னையில் மட்டும் தினசரி 900 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

சென்னையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு முழுமையான சிகிச்சை கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது.  இதனால் பலர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்து வருகின்றனர்.  குறிப்பாக ஏற்கெனவே பல்வேறு பாதிப்புகளுடன் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விடுகின்றனர். மேலும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட உடனே மரணம் அடைந்து விடுகின்றனர். இவ்வாறு மரணம் அடைபவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தும்போது பலருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு தினசரி சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைகின்றனர். இதன்படி பார்த்தால் கடந்த மாதத்தில் ெசன்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சென்னை உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஒரு மாதத்தில் மட்டும் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது தொடர்பான பிரத்யேக தகவல்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். இதன்படி சென்னையில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு 350 க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் பொருட்டு சென்னையில் உள்ள முக்கிய மயானங்களில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் தொடர்பான தகவலையும் சேகரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்ட உடல்களின் தகவல்களும் அதிர்ச்சி தரும் ரகமாகவே உள்ளது.

இதன்படி பாதிப்பு அதிகம் உள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் உள்ள மயானங்களில் மட்டும் 450க்கும் மேற்பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து சென்னையில் உள்ள அனைத்து  மயானங்களிலும் கடந்த மே மாதம் மட்டும் 500க்கு மேற்பட்ட உடல்கள் அடக்கம்  செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் சென்னையில் ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல மரணங்களை அரசு மூடி மறைந்து விட்டதாகவும், தனியார் மருத்துவமனைகளில் நிகழ்ந்த பல மரணங்கள் கணக்கில் காட்டப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதைத் தவிர மருத்துவமனைகளுக்கு செல்லும் முன்னரே பலரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு தினமும் பலர் உயிரிழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மரணத்தை மறைக்கும் தந்திரம்

தமிழக அரசு அளிக்கும் தகவல்களை பார்க்கும்போது பெரும்பாலான மருத்துவ கேஸ் டைரிகளில் இறந்தவருக்கு நீண்ட நாட்களாக கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதனால் அவர் இறந்தார். இறந்த பெண்ணுக்கு பல ஆண்டுகளாக நுரையீரல் பிரச்னை, எனவே, அவர் மூச்சு திணறி இறந்தார் என்கிறார்கள். கொரோனா நோய் தாக்கத்தில் ஒன்று நுரையீரலை தாக்கும் என்பதாகும். நீரிழிவு காரணமாக அவர் இறந்தார் அவரது சளி மாதிரியை சோதனை செய்தபோது அவருக்கு கொரோனா இருந்தது என்றே கூறுகின்றனர். பல இடங்களில் கொரோனா 20 முதல் 60 சதவீதம் வரை இருந்தாலும் வீட்டில் இருக்கச் சொல்லி மருந்து மாத்திரைகளை கொடுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். சிலரை மையங்களில் தங்க வைத்து உணவு, வைட்டமின் மாத்திரையுடன் கழட்டி விடுகின்றனர். இவர்கள் நோய் முற்றி இறந்தால், சத்தமில்லாமல் டிபி நோயால் இறந்தார் என்று மூடி மறைக்கின்றனர். ஆனால் அடக்கம் செய்யும் போது கொரோனா விதியை பின்பற்றி அடக்கம் செய்வது ஏன் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அரசு அறிவித்த பலி எண்ணிக்கை

சென்னையில் தற்போது வரை கொரோனா பாதிக்கப்பட்டு 128 பேர் மட்டுமே மரணம் அடைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 30 பேரும், திரு.வி.க.நகரில் 25 பேரும், தேனாம்பேட்டையில் 17 பேரும், தண்டையார் பேட்டை மற்றும் அண்ணா நகரில் 15 பேரும், கோடம்பாக்கத்தில் 8 பேரும்,அடையாறில் 6 பேரும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களில் 3 பேரும், மணலியில் 2 பேரும், மாதவரத்தில் ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.

எப்போது சோதனை  செய்யப்பட்டது

கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு எப்போது சோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்தது என்ற தகவலை தனியார் மருத்துவமனைகள் வெளியிடுவது இல்லை. கடந்த 1ம் தேதி மரணம் அடைந்த சுகாதாரத் துறை அறிவித்த மரணங்களில் 3 மரணங்கள் தனியார் மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன. ஆனால் இதில் இவர்களுக்கு எப்போது சோதனை செய்யப்பட்டது மற்றும் முடிவுகள் எப்போது வெளியானது என்ற தகவல் அதில் வெளியிடப்படவில்லை. ஆனால் அரசு மருத்துவமனைகளில் இறப்பவர்களின் விவரங்களில் மட்டும் சோதனை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுகிறது.

5 நாட்கள் கழித்து இறப்பு அறிவிப்பு

காய்ச்சல் காரணமாக 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 72 வயது முதியவர் (எண் : 174) 26ம் தேதி மரணம் அடைந்துவிட்டார். ஆனால் அவர் இறந்து தொடர்பான விவரத்தை கடந்த 1ம் தேதி சுகாதாரத் துறை அறிவித்தது. இத்தனை நாள் தாமதம் ஆனதற்கு என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: