15ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு தேர்வை 2 மாதம் தள்ளிவைக்க கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் தாக்கல் செய்துள்ள மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெற்றோர்களிடம் கருத்து கேட்காமலும், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமலும் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 இந்த ஆண்டு 9 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வையும், 8 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் 11ம் வகுப்பு தேர்வையும், ஊரடங்கு காரணமாக தேர்வு எழுத முடியாமல் இருந்த 36 ஆயிரத்து 89 மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வையும் எழுத உள்ளனர்.   இந்த தேர்வு பணிக்கு 3 லட்சத்து 87 ஆயிரத்து 623 ஆசிரியர்களும், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் என 22 லட்சத்து 43 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.  சுமார் 1.5 லட்சம் மாணவர்களுக்கு திடீரென தேர்வை எப்படி எழுத முடியும். அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்காமல் தேர்வை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியதாகிவிடும்.

எனவே, மாணவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தி அதன்பிறகு தேர்வுகளை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இதற்காக வரும் 15ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: