×

70 நாள் கோயில் மூடப்பட்ட நிலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதி: உள்ளூர் மக்களுக்கு முதல் வாய்ப்பு

8, 9, 10 ஆகிய 3 நாள் திறப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரிசோதனை அடிப்படையில் உள்ளூர் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 120 ஆண்டுகளுக்கு முன்பு ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் இரண்டு நாட்கள் கோயில் மூடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 20ம் தேதி முதல்  கோயில் மூடப்பட்டது. தற்போது மத்திய அரசு 5ம் கட்ட ஊரடங்கில் தளர்வு வழங்கி 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏழுமலையான் கோயில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தை பரிசீலித்த மாநில அரசின் சிறப்பு முதன்மை செயலாளர் ஜெ.எஸ்.வி.பிரசாத், ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க உத்தரவு வழங்கி உள்ளார்.

மேலும் முதல்கட்டமாக சோதனை முறையில் தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் (திருமலைவாசிகளை) ஒவ்வொருவருக்கும் 6 அடி  இடைவெளியுடன்  தரிசனம் செய்து வைக்கும் விதமாக அனுமதி வழங்கி உள்ளார். பின்னர்,   இதர பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களை எவ்வாறு அனுமதிப்பது என்பது குறித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார்  70 நாட்களுக்கு பிறகு ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயவாடாவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கடந்த காலத்தில் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்தனர். 8ம் தேதி முதல் மத்திய அரசு வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என அறிவித்ததைதொடர்ந்து மாநில அரசை கேட்டுக்கொண்டோம். அரசும் அனுமதி வழங்கியதால் வரும் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய 3 நாட்கள் தேவஸ்தான பணியாளர்கள், உள்ளூர் பொதுமக்கள் சோதனை முறையில் தனிமனித இடைவெளியுடன் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு மணி நேரத்தில் எத்தனை பேரை தரிசனம் செய்து வைக்க முடியும், எந்த இடத்தில் கிருமிநாசினி வைப்பது, முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே தரிசனம் செய்வது போன்ற நிபந்தனைகளுடன் தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து பரிசீலித்து அதன்பிறகே படிப்படியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

Tags : Ezumalayayan Darshan ,locals ,Adzan , Ezumalayan Darshan, Locals, Tirupati Ezumalayan Temple
× RELATED ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை