கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டும் ஓயாத கட்டுப்பாடுகள்: துடி துடித்த இதயத்தை இயங்க வைக்க மறுக்கும் இதயமில்லா மருத்துவத்துறை

* 21-1-2020 வரை காத்திருப்பவர்கள்

சென்னை: ெகாரோனா பேரிடரைக் காரணம் காட்டி இதய மாற்று ஆபரேசனுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுக்க மறுத்து வருகின்றனர். இதனால் தானமாக பெறப்பட்ட இதயங்கள், யாருக்கும் பயன்படாமல் துடிப்பை நிறுத்திக் கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை மாற்று இதயத்துக்காக 38 பேர் பதிவு செய்து காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் நோய், அங்கிருந்து கேரளா திரும்பிய ஒருவர் மூலம் இந்தியாவில் பிப்ரவரி மாதம் காலடி வைத்தது. தொடர்ந்து வெளி நாட்டில் இருந்து திரும்பியவர்கள் மூலம் நாடு முழுவதும் ெகாரோனா நோய் வேகமாக பரவியது.

இதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தனியாக வைத்து பரிசோதனை நடத்தி அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். நோய் தொற்று இல்லாதவர்களை மட்டும் வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், நாட்டில் எந்த விமான நிலையத்திலும் அப்போது பரிசோதனை நடத்தப்படவில்லை. அதன்பின்னர் மளமளவென கொரோனா பரவியது. அதில் தற்போது மகராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் வேகமாக கொரோனா பரவ ஆரம்பித்ததால், 2005ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், அனைத்து மாநில சுகாதாரத்துறையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இதற்காக கடந்த மார்ச் 31ம் தேதி தனி வழிகாட்டு நெறிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி, சுகாதாரத்துறை தொடர்பான எந்த நடவடிக்கைகளும் மத்திய அரசின் அனுமதியுடன் நடைபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.  குறிப்பாக, மாநில சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நடைபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட இதய மாற்று அறுவைச் சிகிச்சை, சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த உயிர்காப்பு அறுவைச் சிகிச்சைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் எந்த மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடைபெறவில்லை.

இதனால் நாடு முழுவதும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளிகள் பலர் உயிரிழந்தனர். இதய நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இதயம் தேவைப்பட்டால், தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ‘டிரான்ஸ்டான்’ என்ற பிரிவினால் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். சாலை விபத்து மற்றும் தவறி கீழே விழுந்து விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துகளில் சிக்கி மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கண், நுரையீரல், கல்லீரல் ஆகியவை தானமாக எடுக்கப்படும். அதில், இதயம் கேட்டு பதிவு செய்தவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில், முதலில் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு 6 மணி நேரத்தில் இவற்றை பொருத்த வேண்டும். இதனால் முதலில் உள்ளூரில் உள்ளவர்கள் பின்னர் வெளியூர் அதன்பின்னர் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் பின்னர் வெளிநாட்டினர் என்று வகைப்படுத்தப்பட்டு வழங்கப்படும்.

மத்திய அரசின் நோட்டோ என்ற அமைப்பு, கடந்த மே 18ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், உயிர்காக்கும் அறுவைச் சிகிச்சைகளை, மாநிலங்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்றார்போல அனுமதி வழங்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு கடந்த மார்ச் 3ம் தேதி முதல் இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசிடம் இதயம் கேட்டு இதுவரை புதுக்கோட்டையைச் சேர்ந்த 10 வயது சிறுவன் உள்பட 38 நோயாளிகள் கடந்த ஜனவரி 21ம் தேதி வரை விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும், தற்போது அரசின் இணையதளமும் செயல்படவில்லை. முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக யாரும் பதிவு செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து பல தனியார் மருத்துவனைகளின் அதிகாரிகள், டிரான்ஸ்டான் பிரிவின் இயக்குநராக உள்ள காந்திமதியிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவரோ, மத்திய அரசிடம் இருந்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. இதனால் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும்போது, நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ, மருத்துவருக்கு ஏற்பட்டாலோ பெரிய அளவிலான பாதிப்புகள் உருவாகிவிடும். இதனால் அதற்கு நான் பதில் கூற முடியாது என்று கூறி அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவர்களின் இதயம், தானமாக கொடுப்பதற்காக தயாராக இருந்தது. இது குறித்து மருத்துவமனைகள் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, தமிழக அரசு மறுத்து விட்டது. இதனால் அந்த மாற்று இதயங்கள் வீணாகிவிட்டன. ஆனால், கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே மாதம்  9ம் தேதி மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு முன்னரே, மாநில அரசு அனுமதி வழங்கியதால், 48 வயது பெண் ஒருவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழக அரசு இதுவரை இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோல, சிறுநீரக கோளாறு ஏற்பட்டவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானாலும், டிரான்ஸ்டான் பிரிவிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்கு மட்டும் கடந்த ஜனவரி 21ம் தேதி வரை 5558 பேர் பதிவு செய்து வைத்துள்ளனர். ஆனால் கடந்த 2 மாதமாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதில் ரத்த உறவினர்கள் மூலம் சிறுநீரகம் பெறுகிறவர்களுக்கு மட்டும் கடந்த ஒரு வாரமாக அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அரசிடம் தானமாக சிறுநீரகம் கொடுப்பதாக கூறினால், அதை மற்ற நோயாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோலத்தான் கல்லீரல், நுரையீரல் பாதித்தவர்களுக்கும் கடந்த 2 மாதமாக உறுப்பு மாற்று* அறுவைச் சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் அறுவைச் சிகிச்சை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக தனியார் மருத்துவமனைகள் இயங்க அனுமதி அளிக்கப்படாததால் எல்லா மருத்துவமனைகளிலும் அறுவைச் சிகிச்சை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி இதயம் உள்ளிட்ட அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. நோயாளிகள் பதிவு செய்வதற்காக உள்ள இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. அவையும் செயல்பட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அறுவைச் சிகிச்சை செய்தவர்கள்

        2016       2017    2018    2019

சிறுநீரகம்    339    286            242    212

கல்லீரல்        178    144    121    108

இதயம்        100    97        106    78

நுரையீரல்    33    53    57    60

21-1-2020 வரை காத்திருப்பவர்கள்

சிறுநீரகம்                      5558

கல்லீரல்        453

இதயம்        38

நுரையீரல்    37

Related Stories: