ஆண்டிபட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் கோத்தலூத்து ஊராட்சியில் வரதராஜபுரம் உள்ளது. இங்கு ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக மெயின் ரோடு உள்ளிட்ட சாலைகள் குறுகலாக உள்ளன. இதனால் விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் டிராக்டர்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராமமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதிய தார்ச்சாலை மேம்பாட்டுப் பணிக்காக ஆய்வு நடந்து வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: