நாளை கலைஞரின் 97-வது பிறந்த நாள்; #FatherOfModernTamilnadu என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்...டுவிட்டரில் தமிழக அளவில் முதலிடம்

சென்னை: நாளை கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு #FatherOfModernTamilnadu என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தின் முதலமைச்சராய், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராய் விளங்கிய வரும், திராவிட இயக்கத்தின் போர் வாள்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணாவோடு திமுகவில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட தலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள் நாளை ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையே, கொரோனா பரவலால் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளுக்கு ஆடம்பர நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் அவரவர் இடங்களிலேயே சமூக ஒழுங்கை கடைப்பிடித்து கலைஞர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கழகத் தலைவர் பொறுப்பில் உள்ள நான் தலைவர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்விலும் யாரும் அணிதிரண்டிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும் உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு #FatherOfModernTamilnadu என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. டுவிட்டரில் தமிழக அளவில் தற்போது, இந்த ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: