கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கரூர் பரமத்தியில் 8 சென்டி மீட்டர், குழித்துறை, துவாக்குடியில் தலா 6 சென்டி மீட்டர், திருக்காட்டுப்பள்ளி, கன்னிமாரில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்திற்குள் புயலாகவும், அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் தவிர புயலாகவும் வலுவடைந்து நாளை பிற்பகல் வழக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஸ்வரர் மற்றும் தாமனுக்கு இடையே அலிபாக் அருகே கரையை கடக்கக் கூடும்.

இதன் காரணமாக மன்னார்வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: