மதுரை உட்பட 4 மாவட்டங்களை சேர்ந்த 2ம் நிலை பெண் காவலர்கள் 247 பேருக்கு வேலூரில் பயிற்சி துவக்கம்

வேலூர்: மதுரை உட்பட 4 மாவட்டங்களை சேர்ந்த 247 2ம் நிலை பெண் காவலர்களுக்கும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 384 ஆண் காவலர்களுக்கும் வேலூர் மற்றும் சேவூர் போலீஸ் பயிற்சி பள்ளிகளில் நேற்று பயிற்சி தொடங்கியது. தமிழகத்தில் 8 ஆயிரம் 2ம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ் பயிற்சிப்பள்ளிகளில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 15 நாள் பயிற்சி பெற்ற நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பயிற்சி பெற்றவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 185 பெண்கள் கடந்த சனிக்கிழமை கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 200 ஆண் காவலர்கள் வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நேற்று காலை பயிற்சியை தொடர்ந்தனர். மேலும் சேவூர் பட்டாலியனுக்கு 184 ஆண் காவலர்கள் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த 247 2ம் நிலை பெண் காவலர்கள் நேற்று காலை வேலூர் கோட்டை போலீஸ் பயிற்சிப்பள்ளிக்கு வந்தனர். அவர்கள் நேற்றே தங்கள் பயிற்சியை தொடங்கினர்.இவர்களுக்கு 6 மாதம் கவாத்து, துப்பாக்கிச்சுடுதல், சட்டம் தொடர்பான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். தொடர்ந்து 1 மாதம் காவல் நிலையங்களில் நேரடி பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: