×

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் நிவாரணம் கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க விருதுநகர் மாவட்டத்தலைவர் ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கை அமல்படுத்தியது. தமிழகம் முழுவதும் 14 லட்சம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ளனர். 2 லட்சம் பேர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 ஆயிரம் முடி திருத்துநர்கள் உள்ளனர். 4 லட்சம் பேர் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கைவினைத் தொழிலாளர்களாக 52 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். பனைமரத்தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், கைத்தறி தொழிலாளர்களாக 1.04 லட்சம் பேர் உள்ளனர். இது போக நடைபாதை வியாபாரிகள் பல ஆயிரம் பேர் உள்ளனர். ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கின. இதனால் தொழிலாளர்கள் அன்றாட வாழ்விற்கு வழியின்றி தவித்தனர். எனவே, தமிழக அரசு ரூ.ஆயிரம் நிவாரணமாக வழங்கியது. ஆனால், இது 3 வேளை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை.

போக்குவரத்து வசதி இல்லாததால், அடிப்படைத் தேவைக்கான பொருட்களின் விலை உயர்ந்தது. எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் நிறுவனங்கள் அதிகளவில் நிதி அளித்தன. தற்போது தளர்வுகளுடன் பல நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரூ.20 லட்சம் கோடிக்கு நிவாரணம் அறிவித்தார். ஆனால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்தவித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. எனவே, ரூ.ஆயிரம் என்ற நிவாரணம் நிதியை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், மனு குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர், வருவாய்த்துறை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டடனர். நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Tags : NGO , Case filed ,Rs 9,000 relief, NGO workers
× RELATED தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்தில்...