×

தொடரும் ஊரடங்கால் பஞ்சராகி போன சரக்கு வாகன போக்குவரத்து: வாழ்வாதாரம் இன்றி 10 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

கடலூர்: கொ ரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழில் துறையினர் என ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்வாதாரம் உறைந்து போய்விட்ட நிலையில் ஊரடங்கு தளர்விலும் தள்ளாட்டத்தையே கண்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில் தரப்பினர் வாழ்வாதாரத்தை இழந்து வாடி நிற்கும் சூழலில் மக்களின் அன்றாடப் பணியில் சாலை மார்க்க நகர்வில் முக்கிய இடம் பெற்றுள்ள சரக்கு வாகன போக்குவரத்து தரப்பினர் வாழ்வாதாரம் பஞ்சராகி போயுள்ளது. மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வழிமேல் விழி வைத்து தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி கிடைக்குமா என காத்திருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தின் தலைநகரான கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், நெய்வேலி என அனைத்து பகுதிகளிலும் இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சரக்கு ஏற்றிச் செல்லும் பிரதான பாதையில் சுமார் 8,000 வாகனங்கள் வரை இயக்கப்படுகிறது.  

இதில் சிறிய ரக சரக்கு வாகனத்தில் தொடங்கி மினிவேன், டிப்பர் லாரிகள், கனரக லாரிகள் என பல்வேறு தரப்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கத்தில் உள்ளது. மாவட்டத்திற்குள் செல்லும் உள்ளூர் வாகனங்கள் முதல் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள் என பொருட்களின் நகர்வுக்குகேற்ப வாகனங்களின் போக்குவரத்தும் அமைந்துள்ளது. இதில் கடலூர் சிப்காட் தொழிற்சாலை மற்றும் மாவட்டத்தில் பிரதானமாக வடலூர், கடலூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும். இதுபோன்று மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து வெளி மாநிலத்திற்கு பெரும்பாலும் சரக்கு வாகன போக்குவரத்து கடலூரிலிருந்து இடம் பெறுகிறது. இதுபோன்று கனிமவளங்கலான மணல், கிராவல் உள்ளிட்டவை கொண்டு செல்லும் டிப்பர் லாரிகளின் இயக்கமும் கடலூர் பகுதியிலிருந்து பிரதானமாக உள்ளது.

 விவசாய பயன்பாட்டிற்கான கனரக லாரிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படுகிறது. இலகு ரக சரக்கு வாகனங்கள் மூலம் ஓட்டல் பணிகளில் துவங்கி எலக்ட்ரானிக்ஸ் கடைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட பொருட்களை கொண்டு செல்லும் பணியும் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சாலைப் போக்குவரத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள சரக்கு வாகன போக்குவரத்து கடந்த நான்கு கட்ட ஊரடங்கு கால கட்டத்தில் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் முறையான அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள் இல்லாததால் தல்லாட்டத்தையே கண்டுள்ளது.

தொழில்துறை அனைத்து தரப்பிலும் முடக்கத்தை கண்டுள்ள நிலையில் சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு வழி இல்லாமல் வாழ்வாதாரம் பஞ்சராகி போயுள்ளதாக வேதனையுடன் குறிப்பிடுகின்றனர் சரக்கு வாகன ஓட்டுநர், உரிமையாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த தரப்பினர். உரிமையாளர்கள் , ஓட்டுநர்கள் வாகன உதவியாளர்கள் மற்றும் வாகன இயக்கத்தை நம்பி உள்ள மெக்கானிக் உள்ளிட்ட இதர தரப்பினர் என மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் ஊரடங்கு காரணமாக தங்களது வாழ்வாதாரம் மீண்டும் மலர வழி கிடைக்குமா என வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

வாகன கடன் தொகை வசூல்  தள்ளி வைக்க வேண்டும்
 ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ள நிலையில் வாகனங்கள் தொடர்பான கடன் தொகை வசூலை தள்ளி வைக்க வேண்டும் என மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் கூறுகையில் மாவட்டத்தில் சுமார் 1,200 டிப்பர் லாரிகள் இயக்கத்தில் உள்ளது. சரக்கு ஏற்றிச் செல்லும் வாகன இயக்கத்தை நம்பி பல்வேறு தரப்பட்ட தொழில்கள் உள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கம் கண்டுள்ள நிலையில் சரக்கு வாகனங்கள் இயக்குவதற்காக பெற்றுள்ள கடன் வசூலிப்பு தொகையையும் சம்பந்தப்பட்ட வங்கிகள் தள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிடவேண்டும் என்றார்.


Tags : families , Continuing freight, traffic, 10 thousand families without livelihood
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...