கொரோனா ஊரடங்கால் மீன்பிடி தடைகாலம் முன்னதாகவே முடிந்தது தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு சென்றன: எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்

தூத்துக்குடி:  கொரோனா ஊரடங்கால் மீன்பிடி தடைகாலம் முன்னதாகவே முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜுன் 15ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் மீனவர்கள் மார்ச் மாதம் முதல் கடலுக்கு செல்ல முடியாததால் தடைக்காலத்தை முன்னரே முடித்துக்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து 15 நாட்களுக்கு முன்பாகவே தடைக்காலத்தை முடித்து அரசு அறிவித்தது.  இதைதொடர்ந்து நேற்று அதிகாலை முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதியளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 400 விசைப்படகுகள் உள்ளன. இவற்றில் நேற்று தூத்துக்குடியில் இருந்து 120 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்று இரவு கரை திரும்பின. இதில் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக விசைப்படகுகள் தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்க செல்லாததால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கரை திரும்பின. இதில் வழக்கமாக பிடிபடும் ஊளி, சீலா, பாறை, விளமீன், சாளை, வாவல், திருக்கை, நகரை, இறால், சிறியவகை நண்டுகள் மற்றும் சுறா உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. ஆனால் போதிய அளவிற்கு மீன்பாடு இல்லை என்றும் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் பிடிபடாதது ஏமாற்றமாக இருந்ததாக விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் கடந்த சில மாதங்களாக இல்லாத அளவிற்கு சற்றே மீன் வரத்து அதிகரித்து விலை குறையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் மீன்பிடி துறைமுகத்திற்குள் செல்ல வியாபாரிகள் பாஸ் வாங்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநபர்கள், பொதுமக்கள் யார் மீன்பிடி துறைமுகத்திற்குள் செல்லவேண்டும் என்றாலும் வாகனங்கள் செல்லவேண்டும் என்றாலும் பாஸ் பெற்ற பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இன்று சுழற்சி முறையில் மேலும் 120 விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்கின்றன. நேற்று மீன்பிடிக்க சென்ற படகுகள் இன்று ஓய்வெடுக்கின்றன.

படகில் 12 பேர்  மட்டுமே அனுமதி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஒரு படகுக்கு 20 பேருக்கு மேல் மீன் பிடிக்க சென்று வந்தனர். ஆனால் தற்போது சமூக விலகலுக்காக ஒரு படகிற்கு அதிகபட்சமாக 12 பேர் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் முன்னதாக விசைப்படகு மீனவர்களுக்கு ஸ்க்ரீனிங் டெஸ்ட் எடுக்கப்பட்ட பின்னரே கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: