கொரோனா ஊரடங்கால் மாறிப்போன பழக்கவழக்கம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல், டென்ஷன் பிரச்னையில் இருந்து தப்புவது எப்படி?: டாக்டர் விளக்கம்

சென்னை: கொரோனா ஊரடங்கால் மக்களுடைய பழக்கவழக்கங்கள் மாறிபோய் விட்டன. இதனால் மக்களுக்கு தொண்டை கரகரப்பு, பைல்ஸ், நெஞ்சு எரிச்சல், மல சிக்கல் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதற்கான விளக்கத்தை தருகிறார் டாக்டர் மாறன் (லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்): முழு ஊரடங்கால் முதல் பாதிப்பாக மக்களில் பலர் டிவி, அல்லது செல்போன்களில் வீடியோ பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு மேல் தான் தூங்க செல்கின்றனர். இதனால் காலையில் 6 மணிக்கு எழுந்துக்கொள்ளும் நேரம், காலை கடன்களை முடிக்கும் நேரம் என எல்லாமே மாறிவிட்டது.  இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. நேரம் தவறி சாப்பிடுவதால், வயிற்றில் அசிடிட்டி என்கிற அமிலம் சுரப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல், பதற்றத்தின் காரணமாக நெஞ்சு எரிச்சல், வாய் புண், வாயில் துர்நாற்றம் என்று பல்வேறு வடிவங்களில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. வீட்டிலேயே இருப்பதால் நொறுக்கு தீனி, பிரைடு உணவுகளை சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. பித்தப்பையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

காலையில் எழுந்ததும் தொண்டை பிரச்னை, தொண்டை கரகரப்பாக இருப்பதாக சொல்கிறார்கள், இதனால் கொரோனா வந்துவிட்டதோ என்று பயப்படுகிறார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமக்கு சுரக்கும் பயம், உணவுப்பழக்கம் மாறுவது போன்றவற்றால் ஆசிட் மேலே தொண்டை, வாய் வரை வந்துவிடுகிறது. இதனால் தொண்டை கரகரப்பு ஏற்படுகிறது. வாய்ப்புண் வருகிறது. இரண்டாவது காரணம் சானிடைசரை அதிகமாக உபயோகிப்பது. அதன் வாசனையே தொண்டை கரகரப்புக்கு காரணமாக உள்ளது. மற்றொன்று ஏசி பயன்படுத்துவது. இதனால்  தொண்டை கரகரப்பு, அது கொரோனா இல்லை.அடுத்ததாக இரணிய, குடல் இறக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்றால், அறுவை சிகிச்சை செய்துவிடுவார்கள் அதனால் கொரோனா வந்துவிடும் என பயந்து சிகிச்சைக்கு போகாமல் உள்ளனர். இது தவறு. அவர்கள் உடனடியாக மருத்துவர்களை ஆலோசித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பிரச்னைகளை தீர்ப்பது எப்படி? வீட்டிலேயே இருந்தாலும், எப்போதும் போல காலையில் எழுந்து குளித்து சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, சரியான நேரத்திற்கு உறங்க வேண்டும். இதுவே பாதி வயிற்று பிரச்னை மற்றும் மன பிரச்னையை போக்கும். இரண்டாவதாக வெயில் காலம் வந்துவிட்டதால் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காரம், வறுத்தது, பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடாமல். காய்கறிகளை சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்திக்காக அதிகமான இஞ்சி, பூண்டு எடுத்துக்கொள்ள வேண்டாம். அதிகமாக சாப்பிட்டால், இதானாலும் வயிறு எரிச்சல், அசிடிட்டி பிரச்னைகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை வேலை செய்ய வைக்க வேண்டும் என்றால், தண்ணீர் குடிப்பது நல்லது ஏன்னென்றால் உடலில் 70 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. செல்களில் தண்ணீர் இருந்தால்  நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யும். இல்லையென்றால் திசுக்கள் சுருங்கி விடும். எனவே திரவமாக குடித்துகொண்டே இருக்க வேண்டும்.

அடுத்ததாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மது அருந்துவது கூடாது. அப்படி அருந்தினால் கல்லீரல் கெட்டுபோய் விடும். மது குடித்தால் கல்லீரல் அதற்காகவே அதிகமாக 80 சதவீதம் வரை வேலை செய்ய வேண்டி உள்ளது. இவ்வாறு டாக்டர் கூறினார்.

ஊரடங்கால் வீட்டில் உள்ள மக்கள் நேரத்துக்கு நன்றாக  தூங்க வேண்டும். இல்லையென்றால் பதற்றம், டென்சன்களால் அமிலம் அதிகமாக சுரந்து நெஞ்சு எரிச்சல், தொண்டை பிரச்னைகள், மலசிக்கல், பைல்ஸ் பிரச்னைகள்  போன்றவைகள் ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு ஒழுங்காக எப்போதும் போலே  சாப்பிட்டு, நேரத்துக்கு உறங்கி எழுந்துக்க வேண்டும். கொரோனா வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மருத்துவர் கூறினார்.

Related Stories: