சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது பற்றி பரிசீலிக்கப்படும்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: ‘‘உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் அத்துடன் மீண்டும் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உண்மையை மறைத்து உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பு சீரமைக்கப்பட வேண்டும். சீனாவை சார்ந்திருப்பது, அதற்கு ஆதரவாக செயல்படுவது, ஊழலை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட விவகாரங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி செய்தால், அத்துடன் மீண்டும் சேருவது பற்றி அமெரிக்கா பரிசீலிக்கும்.

உலக சுகாதார அமைப்புக்காக அமெரிக்கா ₹2800 கோடி செலவிடுகிறது. ஆனால் சீனா ₹280 கோடி மட்டுமே செலவிடுகிறது. உலக சுகாதார அமைப்பு ஆப்ரிக்காவில் எய்ட்ஸ், எச்ஐவி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ‍வில்லை. வரி செலுத்தும் அமெரிக்கர்களின் தாராள குணத்தினால் அவர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். அமெரிக்கா இதனை உலக சுகாதார அமைப்பு மூலம் செய்யவில்லை. இந்த உதவியை அமெரிக்கா அதன் பெயரிலேயே செய்து வருகிறது. உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை எவ்வித பாகுபாடுமின்றி செஞ்சிலுவை சங்கம், உலகம் முழுவதிலும் நிதி தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். இது ஊழலில் திளைத்துள்ள, சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக அல்லாமல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: