×

அய்யா சாமீ...இப்போதைக்கு திறக்காதீங்க...

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து மத்திய அரசுக்கு 2.30 லட்சம் பெற்றோர் மனு

புதுடெல்லி: கொரோனா தாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. இருப்பினும், நாட்டில் கொரோனா தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதனிடையே, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே பள்ளி, கல்லூரிகளை ஜூலை மாதம் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும். கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடித‍த்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 2.30 லட்சம் பெற்றோர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : பள்ளி, கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அரசு எடுத்திருக்கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது பெற்றோர்கள் தீயை கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் போது அரசு தீயுடன் விளையாடுவது போன்றது. கல்வி நிறுவனங்கள் காணொலி மூலம் திறம்பட வகுப்புகள் நடத்துவதாக கூறும் நிலையில், ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதை இந்த கல்வி ஆண்டில் தொடர வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலோ அல்லது அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ayya Sami , Ayya Sami , Don't open, now
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்