×

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு; பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்...!

டெல்லி: தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92. கே.என் லட்சுமணன். 2 முறை தமிழக பாஜ தலைவராக இருந்தார். 2001 சட்டப்பேரவை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு காலமானார். கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்;

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய கே.என்.லட்சுமணன் மறைவு வருத்தமளிக்கிறது. மேலும், நெருக்கடி நிலை சமயத்தில் அவரது பங்கும், சமூக கலாச்சார ரீதியில் அவரது பணியும் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழிசை இரங்கல்:


தெலங்கானா ஆளுநர் தமிழிசை விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,‘ ‘மூத்த தலைவரும், தமிழக முன்னாள் எம்எல்ஏவுமான கே.என்.லட்சுமணன் மறைவு செய்தியால் மன வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்‘‘ என கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின் இரங்கல்:


திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘கொள்கை ரீதியாக மாற்று முகாமில்  இருந்தாலும் தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரது மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சிப் பிரமுகர்களுக்கு திமுக சார்பில் ஆறுதலை  தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதி மரியாதைகள் நடைபெற உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த ஆட்களுடன் அவரது இறுதிச் சடங்குகள் நிகழும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags : KN Lakshmanan ,leaders ,party ,death ,Modi ,BJP ,Tamil Nadu , The death of former Tamil Nadu BJP leader KN Lakshmanan; Prime Minister Modi and political party leaders condole ...
× RELATED தேசிய மருத்துவர்கள் தினம்...