18 மாநிலங்களவை சீட்டுக்கு வரும் 19ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் அமெரிக்கா சென்றார். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதால், அவர் அங்கேயே சிக்கினார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தான் அவர் இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இருந்து வந்ததால், அவர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.இந்நிலையில், நேற்று அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வந்தார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் பங்கேற்ற கூட்டம் நடைற்றது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி வருகிற 19ம் தேதி 18 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் முதல் கட்டமாக குஜராத், ஆந்திராவில் தலா 4 மாநிலங்களவை தொகுதி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3 தொகுதிகள், ஜார்கண்டில் 2, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் தலா ஒரு மாநிலங்களவை தொகுதியில் தேர்தல் நடைபெறும். அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதியுடன் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: