×

‘க்யூ.ஆர்.கோடு’ முறையில் டிக்கெட் கட்டணம் சென்னையில் 2 எம்டிசி பஸ்களில் அறிமுகம்: போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  சென்னையில் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 68 தினங்களாக பொது ஊரடங்கால் இயக்கப்படாமல் இருந்த அரசு பேருந்துகளை தற்போது இயக்க தமிழக அரசு பல்வேறு வழிக்காட்டுதல்களையும், நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.அதனடிப்படையில், பேருந்துகள் ஜூன் 1ம் தேதி முதல் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு பஸ்சில் 60 சதவிகித பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும். 55 இருக்கைகள் கொண்ட புறநகர் பஸ்சில் 32  பயணிகளும், 40 இருக்கைகள் கொண்ட மாநகர் மற்றும் நகரப் பஸ்களில் 24 பேர் பயணிக்கலாம். மக்களின் நலன் கருதி 6 மண்டலங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  இவற்றில் டவுன் பஸ்கள் 2,866ம், புறநகரப் பஸ்கள் 2,637ம், மலைப்பகுதியில் பஸ்கள் 156 என 5,659 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

மேலும் பணமில்லா பரிவர்த்தனை முறையினை நடைமுறைப்படுத்தும் வகையில் பரிசோதனை அடிப்படையில், சென்னையில், அரசுப் பணியாளர்களுக்காக தலைமைச் செயலகத்திற்கு இயக்கப்படுகின்ற மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் 2 பஸ்களில் பேடிஎம் க்யூ.ஆர்.கோடு முறையில் டிக்கெட் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட பஸ் நிலையத்தில் மார்க்கெட் இயங்கி வருகிது.  அதனை வேறு இடத்திற்கு  மாற்றம் செய்ய வேண்டும். எனவே, இன்று (நேற்று) முதல் அங்கு பஸ்கள் இயங்கும். அரசு அறிவித்துள்ளபடி, இ-பாஸ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளக் காரணத்தால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.  ஒரு வாரம் கழித்து இயக்கப்படலாம். தற்போது பஸ்களில் எந்த வித கட்டணமும் மாற்றப்படவில்லை.  10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்துளோம்.  முதலமைச்சர் உத்தரவின் பேரில், தேவைக்கு ஏற்ப, பஸ்கள் இயக்கப்படும்.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளருடன் கலந்து ஆலோசித்துள்ளார். ஏற்கனவே, விடைதாள் திருத்தும் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  
தேவைக்கு ஏற்ப பஸ்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயக்கப்படும். பணியாளர்கள் யாருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை.  ஒருவருடத்திற்கான சராசரியை கணக்கில் கொண்டு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
முழுமையாக பணிக்கு வராமல் இருப்பவர்களுக்கு சம்பளமும், பணிக்கு வருவர்களுக்கு சம்பளம் இல்லாமலும் இருக்கும் நிலையை தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.  யாருக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை.  மீதி இருக்கும் நாட்கள் அவர்களது விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 68 நாட்கள் பேருந்துகள் இயங்காத நிலையில், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கே இ-பாஸ் தேவைப்பட்டது.  தற்போது, ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மண்டலத்திற்குள்ளாக மட்டுமே செல்ல முடியும்.  அடுத்த மண்டலத்திற்கு செல்வதற்கு கட்டாயம் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும். 


Tags : Introduction ,Chennai ,Transport Minister , Introduces ,2 MTC buses ,Chennai via ,QR Code, Transport Minister
× RELATED கொரோனா தடுப்பு மருந்தை...